Published : 26 Oct 2016 10:32 AM
Last Updated : 26 Oct 2016 10:32 AM

சினிமா எடுத்துப் பார் 81: கண் தானத்தை ஊக்குவித்த ரஜினி!

மனிதன்’ படத்தின் வெள்ளி விழா 20.4.1988-ல் சென்னை, ராஜேஸ் வரி கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வழக்கமான சினிமா கொண்டாட்ட விழாவாக மட்டுமல் லாமல் வித்தியாசமான விழாவாகவும் அமைந்தது. அதற்கு காரணம் ‘சங்கர நேத்ராலயா’ கண் மருத்துவமனை சேர்மன் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர் கள்தான். சரவணன் சாரை டாக்டர் பத்ரி நாத் அவர்கள் சந்தித்து, ‘‘நம்ம நாட்டுல ‘கண் தானம்’ குறித்த விழிப்புணர்வு மக்கள்ட்ட இன்னும் சரியா போய்ச் சேரலை. ஒவ்வொருவரும் இறந்த பிறகு கண் தானம் செய்யணும்கிற உணர்வை உண்டாக்கணும்.

இதை ரஜினி சார் சொன்னால் நல்லா இருக்கும். மக்கள் கிட்டயும் ஈஸியா போய்ச் சேரும்!’’ என்று கூறியிருக்கிறார். உடனே சரவணன் சார் என்னை அழைத்து, விஷயத்தை சொன்னார். நானும் ரஜினியை சந்தித்து டாக்டர் பத்ரிநாத் அவர்கள் சொன்ன தகவலை சொன்னேன். ரஜினியும், ‘‘நல்ல விஷயமாச்சே. நிச்சயம் செய் வோம் சார்!’’ என்றார்.

ரஜினியை நடிக்க வைத்து ‘தானத்தில் சிறந்த தானம் கண் தானம்’, இறப்புக் குப் பின் ஒவ்வொருவரும் நிச்சயம் கண் தானம் செய்வதாக மனு கொடுக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படை யில் குறும்படமாக எடுத்து வெளியிட் டோம். ரஜினி சொன்னதாலேயே அந்தக் கருத்து மக்களிடம் போய்ச் சேர்ந்தது. ‘மனிதன்’ வெள்ளி விழா மேடையில் கண் தானம் செய்ய விரும்புபவர்கள் மனு கொடுக்கலாம் என்ற தகவலை பத்திரிகைகள், ஊடகங்கள் மூலம் வெளியிட்டோம்.

‘மனிதன்’ பட விழாவில் மக்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் வந்து குவிந்தன. அப்படி வந்த மனு ஒன்றில், ‘எங்கள் தலைவர் ரஜினிகாந்த் கண் தானம் கொடுக்கச் சொல்லி விட்டார். இப்போதே ரெண்டு கண்கள்ல ஒரு கண்ணை கொடுக்குறேன். எங்கே வரணும்? எப்போ வரணும்னு சொல் லுங்க?’’ன்னு ஒருவர் எழுதியிருந்தார். அந்த அளவுக்கு ரஜினியின் வேண்டு கோளுக்கு மதிப்பிருந்தது. இன்றைக் கும் சங்கர நேத்ராலயாவுக்கு பலர் கண் தானம் செய்துகொண்டிருக் கிறார்கள். இதற்குக் காரணமாக இருந்த ரஜினிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

‘மனிதன்’ வெள்ளிவிழா நிகழ்ச்சியில் வழக்கம் போல படக்குழுவினருக்குக் கேடயம் வழங்கப்பட்டது. மேடையில் இருந்த விருந்தினர்கள் பலரும், ‘‘முத்து ராமன் மாதிரி சினிமாத் துறையில் நல்ல மனிதர் யாரும் இல்லை!’’ என்று பேசினார்கள். அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த சோ அவர்கள் பேசும்போது, ‘‘இங்கே முத்துராமனை எல்லோரும் சினிமாத்துறையில் இவ ரைப் போல நல்ல மனிதர் யாரும் இல்லை என்று பேசினார்கள்.

அதை நான் மறுக்கிறேன்!’’ன்னு சொன்னார். ஒரு நிமிஷம் அரங்கமே அமைதியானது. ஒரு சின்ன இடைவேளைக்குப் பின், ‘‘அவர் சினிமாத் துறையில மட்டுமல்ல; உலகத்துலயே ரொம்ப நல்ல மனிதர்!’’ என்று முடித்தார். கைத்தட்டல் அதிர்ந் தது. எங்கேயும், எப்போதும் யாரை சந்திக்கும்போதும் என்னைப் பற்றி பேச்சு எழுந்தால் சோ சார் அவர்கள், என்னை உயர்வாகவே பேசுவார்கள். அந்த நல்ல உள்ளத்துக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்!

சில மாதங்களுக்கு முன் சோ அவர் கள் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது அவரை பார்க்க பலமுறை முயற்சி செய் தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் பார்க்க முடியாமல் போயிற்று. சமீபத்தில் அவரது உடல் நிலை குணமாகி ‘துக்ளக்’ ஆபீஸில் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. அந்த நேரத்தில் கண்ணதாசன் விழா நிகழ்ச்சி வந்ததால் அதற்கான அழைப் பிதழுடன் அவரை சந்திக்கச் சென்றேன். ஒவ்வொரு ஆண்டு கண்ணதாசன் விழா வின்போதும் நானும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களும்தான் அழைப்பிதழோடு சென்று அவரை அழைப்போம். இந்தமுறை நானும், அறக்கட்டளைத் தலைவர் ‘இலக்கிய சிந்தனை’பா.லட்சுமணன் அவர்களும் போனோம்.

அவரை பார்த்த நேரத்தில் ‘துக்ளக்’ இதழுக்கு எழுத வேண்டிய கட்டுரையை அவர் சொல்லச் சொல்ல அவரது உதவியாளர் எழுதிக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் சோ அவர்களுக்கு மகிழ்ச்சி. கவியரசர் விழாவினை சிறப்பாக நடத்துவதற்காக எங்களை பாராட்டினார்.

சோ சார் அவர்கள் எந்த விஷயத்திலும் துணிச்சலோடு முடிவெடுப்பார். ‘ஒன் மேன் ஷோ’ என்று சொல்ற மாதிரி அவர் ஒரு ‘ஒன் மேன் ஆர்மி’. விரைவில் அவர் பூரண குணம்பெற்று பேச்சு, எழுத்து, நடிப்பு, அரசியல் ஆகிய விஷயங்களில் ஈடுபட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துவோம்!

ஒருமுறை பஞ்சு அருணாசலம் அவர் களுக்கு சில சிக்கல்கள் உருவானது. ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணி னால் அந்தப் பிரச்சினையில் இருந்து அவர் வெளியே வர முடியும். இந்த விஷயத்தை ரஜினியிடம் போய் சொன் னேன். அதுக்கு ரஜினி, ‘‘என்ன முத்து ராமன் சார், தேதியே இல்லை. எப்படி இந்த நேரத்துல படம் பண்ண முடியும்? இருந்தாலும் நம்ம பஞ்சு சாராச்சே! எப்படி செய்யாம இருக்கறது? நான் பத்து நாள் கால்ஷீட் கொடுக்கிறேன். அதுக்கு தகுந்த மாதிரி ஒரு கதையைத் தயார் பண்ணுங்க?’’ன்னு சொன்னார். அதுக்கு நான், ‘‘எப்படி ரஜினி? நீ கெஸ்ட் ரோல் பண்ணினா, ரஜினி வந்துட்டு போறார்னு சொல்வாங்க. விநியோகஸ் தர்கள் படத்துக்கு உரிய விலை கொடுக்க மாட்டாங்க. பெருசா வியா பாரம் ஆகாது. நான் ஒரு யோசனை சொல்றேன். அது உன்னால முடியு மான்னு பாரு!’’ன்னு சொன்னேன். ‘‘என்ன சார்..!’’னு கேட்டார்.

‘‘பத்து நாட்கள்னு கொடுக்கிற தேதியை இருபத்தைந்து நாட்களா கொடு. உன்னை வைத்து முழு படத்தையும் எடுத்துடுறேன்!’’ன்னு சொன்னேன். அதுக்கு அவர், ‘‘எப்படி சார் 25 நாட்கள்ல முழு படம் எடுக்க முடியும்?!’னு கேட்டார். அதுக்கு நான் ஹிந்தியில் ஒரு படத்தை பார்த்து வெச்சிருக்கோம். அதில் ரெண்டு ஹீரோ. அதனால உன்னோட கால்ஷீட்டுக்கு 25 நாட்கள் போதும்!’’னு சொன்னேன். அதுக்கு ரஜினி, ‘‘சரி.. சார். ஆனா 25 நாட்களுக்கு மேல ஒரு நாள்கூட தேதி இல்லை!’’ன்னு சொன்னார். உடனே நான், ‘ஒரு நாள் கூட அதிகமா கேட்க மாட்டேன்!’னு சொன்னேன். அப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு எடுக்கப்பட்ட படம்தான் ‘குரு சிஷ்யன்’.

‘குரு சிஷ்யன்’ படத்துக்காக விஜிபி-யில் ‘ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு’ பாட்டோட ஷூட்டிங். கவுதமிக்கு முதல்நாள் படப்பிடிப்பு. ரஜினிகூட ஆடும்போது அவருக்கு சரியா மூவ் மெண்ட் வரலை. ரெண்டு மூணு ஷாட்ஸ் எடுத்துப் பார்த்தோம். எனக்கும், ரஜினிக்கும் திருப்தியா இல்லை. எப்படி ஷூட்டிங்கை தொடர்வது?

- இன்னும் படம் பார்ப்போம்… | படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x