

இயக்குநர் மணிரத்னம், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கி இருக்கிறார். 2 பாகமாக உருவாகியுள்ள இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ்டாக்கீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
லைகா சுபாஸ்கரன், இந்த படத்தைஎடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். சுமார் 70 வருஷத்துக்கு முன்னால, கல்கி பத்திரிகையில ‘பொன்னியில் செல்வன்’ தொடரா வரும் போது, பெரிய ஸ்டார் ஹீரோவுக்கு முதல்நாள், முதல் ஷோ டிக்கெட் வாங்க எப்படி கஷ்டப்படுவாங்களோ, அதே போல அந்தப் பிரதிய வாங்க வாசகர்கள் துடிச்சாங்க. அந்தமாதிரி புரட்சி செஞ்ச கதைதான் இது.
நானும்புத்தகம் நிறைய படிப்பேன். எல்லாரும் ‘பொன்னியின் செல்வன் படிச்சிருக்கீங்களா?’ன்னு கேட்பாங்க. என் பழக்கம் என்னன்னா, புத்தகம் எத்தனை பக்கம்னு கேட்பேன். 200, 300 பக்கம்னா ஓகே. அதுக்கு மேலனா தொடவே மாட்டேன். அதனால ‘பொன்னியின் செல்வன்’ எத்தனை பக்கம்னு கேட்டேன். அது 5 பார்ட்டுங்க, 2000 பக்கம் வரும்னு சொன்னாங்க. ‘அட போய்யா’ன்னு விட்டுட்டேன்.
பிறகு 80-கள்ல ஒரு பத்திரிகையில, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இப்ப எடுத்தா, வந்தியத்தேவன் கேரக்டருக்கு யார் பொருத்தமா இருப்பாங்க?’ன்னு வாசகர்கேள்விக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பதில் சொன்னாங்க. அதுல ‘ரஜினிகாந்த்’னு சொல்லியிருந்தாங்க. உடனேயே குஷியாயிடுச்சு.
‘பொன்னியின் செல்வனை’ படிக்க ஆரம்பிச்சேன். முடிச்சதும் அமரர் கல்கி இருந்திருந்தா அவங்க வீட்டுக்குப் போயி, அவர் கால்ல சாஷ்டாங்கமா விழுந்திருப்பேன். இந்த கதையில, நந்தினி தான் எல்லாமே. ‘பொன்னியின் செல்வி’ன்னு இதுக்குப்பெயர் வச்சிருக்கணும். இதை வைத்து தான், ‘படையப்பா’ நீலாம்பரி கதாபாத்திரம் உருவாச்சு.
இந்த படத்தை மணிரத்னம் பிளான் பண்ணும் போது, நான் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் நடிக்கணும்னு கேட்டேன். அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. உங்களை, இந்த மாதிரி பயன்படுத்த விரும்பலைன்னு சொன்னார். வேறு யாரா இருந்தாலும் நான் கேட்டதுக்கு வேண்டாம்னு சொல்லியிருக்க மாட்டாங்க.
ஆனா, அவர் வேண்டாம்னு சொன்னார். அதுதான் மணிரத்னம். பொன்னியின் செல்வனில் 40-வது அத்தியாயத்தில் தான்அருண்மொழிவர்மன் தோன்றுவார். இந்த படத்துல அவரோட அறிமுகக் காட்சியை மணிரத்னம் எப்படி வைத்திருப்பார்னு பார்க்க ஆவலா இருக்கேன். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.