

தமிழ் சினிமாவில் ஆசிரியர் - மாணவர் உரையாடலை மையப்படுத்தி நிறைய படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் வெகுவாக கவனம் ஈர்த்தவை...
நம்மவர்: ஆசிரியர் செல்வன் - 1994-ம் ஆண்டு கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் கமல், கௌதமி நடித்த திரைப்படம் 'நம்மவர்'. படத்தில் செல்வன் கதாபாத்திரத்தில் கல்லூரி ஆசிரியராக கமல் நடித்திருப்பார். படத்தில் வரும் செல்வன் கதாபாத்திரத்தை நாம் ஏதோ ஒரு வகுப்பில் நிச்சயம் சந்தித்திருப்போம். அந்த ஆசிரியரின் பார்வை நிச்சயம் தியரி, ஹிஸ்டரிக்களை ஒளித்து வைத்திருக்கும் அச்சடிக்கப்பட்ட அந்த புத்தகங்களுக்குள் மட்டும் இருக்காது. அதைத்தாண்டி விசாலமான பார்வைகளை செல்வன் வகையறா ஆசிரியர்களிடம் காண முடியும். அவர் தன்னுடைய முதல் வகுப்பிலேயே பாலின பாகுபாடுகளை உடைத்திருப்பார்.
'ஆண்களும் பெண்களும் சேர்ந்து உட்கார்ந்தால் ஒன்றும் கெட்டுப்போகாது' என கூறி கலந்து அமரவைப்பார். இப்படியாக வகுப்பில் பல மாற்றங்களை நிகழ்த்தி வரும் கமல், அடாவடித்தனம் செய்யும் கரணை எதிர்கொள்ளும் விதத்தில் அத்தனை முதிர்ச்சி. அடாவடித்தனமே செய்தாலும், அந்த மாணவன் பக்கம் நின்று யோசிப்பார். அவனுக்குள் இருக்கும் உளவியல் சிக்கல்களை பொறுமையாக கையாள்வார். ஒட்டுமொத்தமாக மாணவரை புறக்கணிக்கும்போக்கு படத்தில் கைவிடப்பட்டு, மாணவரின் பக்கம் நின்று பேச வேண்டிய தேவையை தமிழ் சமூகத்திற்கு படம் அழகாக பதிய வைத்திருக்கும்.
சாட்டை: ஆசிரியர் தாயாளன் - அன்பழகன் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியானது 'சாட்டை'. நல்ல ஆசிரியர் vs மோசமான ஆசிரியர் என்ற பாணியிலான கதையை மையப்படுத்தியிருக்கும். தயாளன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரகனி மாணவர்களிடையேயான தயக்கங்களை உடைத்திருக்கும். பெண் ஆசிரியரைப் பார்த்து மாணவன் கவிதை சொல்வது, அதை அவர் எடுத்துக்கொள்ளும் விதம், மாணவியிடம் ஆண் ஆசிரியர் நடந்து கொள்ளும் விதம், காதல், டீன் ஏஜ் பிரச்சினை என பல பிர்சனைகளை படம் பேசியிருக்கும். கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தாலும் படம் பேசும் விஷயம் கவனிக்ககத்தக்கது.
வாகை சூடவா: ஆசிரியர் வேலுதம்பி - சற்குணம் இயக்கத்தில் 2011-ம் ஆண்டு வெளியானது 'வாகை சூடவா'. பெரிய அளவில் கவனிக்கப்படாத அழுத்தமான கதையம்சம் கொண்ட படம். கல்வியின் முக்கியத்துவத்தை ஆழமாக சொல்லியிருக்கும் படம். குறிப்பாக ஒரு காட்சியில், செங்கல் சூளையில் முதலாளி வர்க்கத்தால் சுரண்டப்படுவதை உணர்ந்த பெண் தன் மகளை அழைத்துக்கொண்டு விமலிடம், 'ஐயா என் பிள்ளைக்கு எதையாச்சும் சொல்லிக்கொடுயா' என கூறி நம்மை கலங்கடித்திருப்பார். நீண்ட நெடிய வசனங்களோ, பிரசாரமோ இல்லாத கணமான காட்சி அது. அந்த ஒற்றைக்காட்சியில் கல்வியின் முக்கியத்துவத்தை அழுத்தமாக பதியவைத்திருப்பார்கள். ஆசிரியராக பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் கல்வியை கொண்டு செல்லும் விதத்தில் முழுமை சேர்த்திருப்பார் விமல்.
மாஸ்டர்: மாஸ்டரின் ஜே.டி கதாபாத்திரமும், 'நம்மவர்' படத்தில் ஆசிரியர் செல்வன் கதாபாத்திரமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இரண்டு கதாபாத்திரங்களும் மாணவர்களுடனான ஆசிரியரின் அணுகுமுறை மாற்றி அமைத்திருக்கும். கூடுதலாக மாஸ்டரில் மாணவர்களுக்கு அரசியலுக்கான தேவையையும், தேர்தலுக்கான முக்கியத்துவத்தையும் சொல்லிக்கொடுத்திருப்பார் விஜய். ஜாலியான ஆசிரியர் கதாபாத்திரம் ஜேடியுடையது. செக்ஸ் எஜூகேஷன் குறித்து படம் தொட்டு சென்றிருக்கும். படத்தின் ஓரிடத்தில் 'ஆசிரியர் மாணவர்கள் சொல்வதையும், மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்வதையும் கேட்பதில்லை' என கூறியிருப்பார் இந்த சிக்கலை தற்போதைய சூழலில் நம்மால் பொருத்தி பார்க்க முடியும். ஆசிரியர் - மாணவர் இடையேயான ஆரோக்கியமான உரையாடலின் தேவை எழுந்திருப்பதை உணர முடிகிறது. அது களைய வேண்டும் என்பது தான் மேற்கண்ட படங்களின் காட்சி மொழி.
கவனம் ஈர்த்த ஆசிரியர்கள்: தவிர, 'பரியேறும் பெருமாள்' படத்தில், 'அன்னைக்கு என்னைய அடக்கணும்னு நெனைச்சவன்லாம் இன்னைக்கு ஐயா சாமின்னு கும்பிட்றான். உன்ன சுத்தி நடக்குற விஷயங்கள மீறி என்னைய மாதிரி நீயும் ஜெயிச்சு வரணும்' என கூறிவிட்டு 'உனக்கு என்ன தோணுதோ செய்' என அனுப்பி வைப்பார். புரிதலின் வழி பிறக்கும் பூ ராமுவின் வார்த்தைகள் தான் அந்த காட்சியை தாங்கி நிற்கும். 'சாதிய அடக்குமுறையிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்ள கல்வியை பற்றிப்பிடித்துக்கொள்' என்ற அந்த ஆசிரியரின் வார்த்தைகள் முக்கியமானவை.
அதேபோல 'கற்றது தமிழ்' படத்தில் அழகம் பெருமாள் கதாபாத்திரம் பிரபாகர் எனும் மனிதனை உருவாக்கியிருக்கும். 'தர்மதுரை படத்தில் ராஜேஷ் நடித்திருக்கும் ஆசிரியர் கதாபாத்திரம் கவனிக்க வைத்திருக்கும். இப்படியாக தமிழ் சினிமா அழுத்தமான வசீகரித்த ஆசிரியர் கதாபாத்திரங்களை திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறது. மேற்கண்ட குணநலன்கள் கொண்ட ஆசிரியர் கதாபாத்திரங்களில் நிச்சயம் ஒரு ஆசிரியரை நம் பள்ளியிலோ, கல்லூரியிலோ கடந்து வந்திருப்போம். அவர்களை ஆசிரியர் தினமான இந்நாளில் நினைவுகூறுவது நம் கடமை!