லைகர்: திரை விமர்சனம்

லைகர்: திரை விமர்சனம்
Updated on
1 min read

தனது கணவரின் ஆசைக்காக, மகன் லைகரையும் (விஜய் தேவரகொண்டா) மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ் ஃபைட்டராக்க வேண்டும் என்றுநினைக்கிறார் அம்மா பாலாமணி (ரம்யாகிருஷ்ணன்). இதற்காக மும்பை சென்று,தனது கணவரிடம் தோற்ற, கிறிஸ்டோபரிடம் (ரோனித் ராய்), பயிற்சிப் பெற வைக்கிறார். கவனம் பயிற்சியில்தான் இருக்க வேண்டும், பெண்கள் மீது செல்லக் கூடாது என்கிறார் பயிற்சியாளர்.

ஆனால், எதிர்கோஷ்டி ஃபைட்டரின் தங்கை தன்யா (அனன்யா பாண்டே) மீது விஜய் தேவரகொண்டாவுக்கு காதல். இதற்கிடையே சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ள அமெரிக்கா செல்லும் விஜய் தேவரகொண்டாவுக்கு, தனது மானசீக குரு மைக் டைசனே வில்லனாக வந்து நிற்கிறார். அவரை எப்படி வென்று, காதலியை மீட்கிறார் என்பதுதான் படம்.

தெலுங்கில் சில ஹிட் மசாலா படங்களைக் கொடுத்திருக்கும் புரி ஜெகநாத், இதிலும் அதே மசாலாவைதான் அரைத்திருக்கிறார். பல படங்களில் பார்த்தக் கதைதான் என்றாலும் திரைக்கதையில் ஏதாவது புதுமை செய்திருப்பார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிச்சம்.படத்தின் ஒரே ஆறுதல் விஜய் தேவரகொண்டா. தனது கேரக்டருக்காக உடலை மெருகேற்றியதில் இருந்து, ஆக் ஷன் காட்சிகளில் பறந்து, பாய்ந்து, உருண்டு, புரள்வது வரை அதிகமாகவே மெனக்கெட்டிருக்கிறார்.

அதற்காக நினைத்த இடத்தில் இல்லாம் சண்டைக் காட்சியை வைத்திருப்பது, ‘போதும்யா’ என்று சொல்ல வைக்கிறது.அனன்யா பாண்டேவின் கேரக்டர், முதலில் மோதல், பிறகு காதல் என்ற சினிமா வழக்கப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நடிப்பு? ஒரு சூப்பரான ஃபைட்டரை, அவர் திக்கிப் பேசுபவர் என்பதற்காகவே, நிராகரிப்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை. அம்மா பாலாமணியாக ரம்யா கிருஷ்
ணன். இன்னும் பாகுபலி பாதிப்பிலேயே உறுமுகிறார்.அவருக்கும் மகனுக்குமான சென்டிமென்ட் காட்சிகள் ஒட்டவில்லை.

வில்லன் கேரக்டருக்கு எதற்கு மைக்டைசனை இழுத்து வந்து அடி வாங்கவைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. அவரும் விஜய் தேவரகொண்டாவிடம் ஜாலியாக அடி வாங்கி, கேலியாக செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். ஒவ்வொரு காட்சியையும் ‘ரிச்’சாகக் காட்ட விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு உதவி இருக்கிறது. பாடல்கள் படத்துக்குப் பலம் சேர்க்கவில்லை. திக்கிப் பேசுவதை ஆரம்பத்தில் இருந்தே பெருங்குறை எனக் கூறி கிண்டல் அடித்திருப்பதையும், பெண்களைச் சரமாரியாக வசைபாடும் வசனங்களையும் தவிர்த்திருக்கலாம். வலுவற்ற திரைக்கதையால் வசமாக ஏமாற்றி இருக்கிறது, ‘லைகர்’.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in