

விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'மெல்லிசை' படத் தலைப்பு 'புரியாத புதிர்' என மாற்றியிருக்கிறது படக்குழு.
விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'மெல்லிசை'. தீபன் பூபதி தயாரித்திருக்கும் இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருக்கிறார். சாம் இசையமைப்பில் உருவான இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஜே.எஸ்.கே நிறுவனம் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இந்தாண்டு இப்படத்தை வெளியிடும் முனைப்பில் இருக்கிறது படக்குழு.
முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு 'மெல்லிசை' என்ற தலைப்பு பொருத்தமாக இல்லை என கருதியதால், வேறொரு தலைப்பு வைக்கலாம் என்று ஆலோசித்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து 'புரியாத புதிர்' என்ற தலைப்பு சரியாக இருக்கும் என்று தீர்மானித்திருக்கிறார்கள்.
'புரியாத புதிர்' தலைப்புக்கான உரிமையை ஆர்.பி.செளத்ரியிடம் பேசி வாங்கி, தங்களுடைய படத்துக்கு வைத்திருக்கிறது படக்குழு. மேலும், கே.எஸ்.ரவிகுமாரிடமும் பேசி தங்களுடைய கதைக்கு இந்த தலைப்பு மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படத்தை நவம்பரில் வெளியிடுவதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறது படக்குழு. அவ்வாறு வெளியானால் 2016ம் ஆண்டில் விஜய் சேதுபதியின் 7வது படமாக 'புரியாத புதிர்' அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.