

பாகிஸ்தான் நடிகர்கள் நடித்துள்ள படத்துக்கு தடை தொடர்பாக "கலை நம்மை ஒன்றிணைக்கும்" என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்திய தால், பாகிஸ்தான் நடிகர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில நவநிர்மாண் சேனா கட்சி வலியுறுத்தியது. அதன்பின், பாலிவுட் படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.
இதன் எதிரொலியாக "பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த திரைப்படங்களை 4 மாநிலங்களில் வெளியிட மாட்டோம்" என்று இந்திய திரைப்பட திரையரங்குகள் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஏ தில் ஹை முஷ்கில்' மற்றும் 'ராயீஸ்' உள்ளிட்ட படங்கள் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
இப்பிரச்சினையில் இந்தி திரையுலகின் முன்னண் இயக்குநரான கரண் ஜோஹர், பிரதமர் மோடிக்கு சராமரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், இந்திய திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் "பாகிஸ்தான் நடிகர்கள் நடித்துள்ள இந்திய திரைப்படங்கள் திரையிடப்படாது என்பது வெட்கக்கேடானது. கலை நம்மை ஒன்றிணைக்கும் என்பதை இந்த உலகுக்கு நாம் நிரூபிக்க வேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.