

நடிகர் ரஜினிகாந்த், திடீர் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்கா சென்றுள்ளார்.
‘கபாலி’, ‘2.0’ ஆகிய படங்களின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்த ரஜினிகாந்துக்கு கடந்த மே மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். இதையடுத்து ‘2.0’ படத்தில் அவரது காட்சிகளை தவிர்த்து மற்றவர்கள் நடிக்கும் காட்சிகளை இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.
சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்போலோ மருத்துவமனைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற அவர், முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்றவர் துபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளார். ரஜினிகாந்துடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷும் அமெரிக்கா சென்றுள்ளார். ரஜினிகாந்த் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்று கூறப் படுகிறது.