

“‘மகான்’ படத்தில் இடம்பெற்ற காரில் செல்லும் காட்சியில், நானும் துருவ் விக்ரமும் பேசிக்கொண்டே பயணிக்கும் காட்சி... ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. அந்த காட்சி படமாக்கப்படும் போது தான், அவருக்குள் இருக்கும் நடிகனையும், அவரது நடிப்பாற்றலையும் கண்டேன். ரசித்தேன்'' என நடிகர் விக்ரம் அனுபவம் பகிர்ந்தார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது. தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்வு கோவையில் நடைப்பெற்றது. அப்போது கல்லூரியில் மாணவர்களிடையே பேசிய விக்ரம், ''கோப்ரா படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். நடிகை ஸ்ரீநிதி, ‘கே ஜி எஃப்’ படத்தின் முதல் பாகம் வெளியாவதற்கு முன், இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கடும் உழைப்பாளி. நடிகை மிருணாளினியும் அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதலியாக உணர்வுபூர்வமான வேடத்தில் தன் மொத்த உழைப்பையும் வழங்கி இருக்கிறார்.
படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து, ‘கோப்ரா’ படத்தினை அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியிடவேண்டும் என்பதற்காக இறுதி கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் வெளியான ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ என ஒவ்வொன்றும் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியானது. அதேபோல் ‘கோப்ரா’ படமும் வித்தியாசமான ஜானரில் தயாராகி இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும்.
இந்தப் படத்தில் நான் ஏழு கெட்டப்களில் நடித்திருக்கிறேன். அதுவும் இந்தப் படத்தின் திரைக்கதையில் முக்கியமான அம்சம். இதை கடந்து இந்த திரைப்படம் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர், எமோஷனல் டிராமா, சயின்ஸ் ஃபிக்சன், ஹை ஆக்டேன் ஆக்சன் சினிமா. என எல்லாமே கலந்து இருக்கும்'' என்றார்.
மேலும், ''இந்த பூமி பெரியது. இதனை எங்கள் தலைமுறையை சேர்ந்தவர்கள் சற்று சொதப்பிவிட்டனர். இதனை இன்றைய இளம் தலைமுறையினரான நீங்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். சுற்றுப்புற சூழலில் உள்ள மாசுகளை அகற்றி, ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கு எந்த துறையில் விருப்பம் இருக்கிறதோ... அந்த துறையில் முழுமையான மனதுடன் பணியாற்றினால், நீங்களும் சாதனையாளர் தான். உங்களையும் ஒரு நாள் உலகம் திரும்பி பார்க்கும்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர், ‘மகான்’ படத்தில் இடம்பெற்ற காரில் செல்லும் காட்சியில், நானும் துருவ் விக்ரமும் பேசிக்கொண்டே பயணிக்கும் காட்சி... ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. அந்த காட்சி படமாக்கப்படும் போது தான், அவருக்குள் இருக்கும் நடிகனையும், அவரது நடிப்பாற்றலையும் கண்டேன். ரசித்தேன்'' என்றார்.