

முழுக்க பாடல்கள் பணிகளை முடித்தவுடன் படப்பிடிப்புக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதால் தான் தாமதம் என்று ராஜீவ் மேனன் - ஜி.வி.பிரகாஷ் படக்குழு தெரிவித்தது.
'ப்ரூஸ் லீ', 'கடவுள் இருக்கான் குமாரு' மற்றும் 'அடங்காதே' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இதில் 'ப்ரூஸ் லீ' மற்றும் 'கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்களின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படங்களைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கவிருக்கும் படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் துவங்கும் என படக்குழு அறிவித்தது. ஆனால் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமலேயே இருந்தது.
இந்நிலையில் இது குறித்து படக்குழுவில் பணியாற்றும் ஒருவரிடம் கேட்ட போது, "முழுக்க இசை சம்பந்தமான படம் என்பதால் முதலில் பாடல்கள் பணிகளை முடிக்க திட்டமிட்டோம். தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டார்.
மேலும், இசைக் கலைஞராக பல்வேறு வாத்தியங்கள் வாசிப்பது போன்ற காட்சிகள் இருக்கிறது. அதற்காகவும் சில முக்கிய இசைக் கோப்புகளையும் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரு படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அனைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் சில பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். இம்மாத இறுதி அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் படப்பிடிப்புக்கு சென்றுவிடுவோம்" என்று தெரிவித்தார்கள்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு சாய் பல்லவி நாயகியாகவும், சீனு மோகன் அப்பாவாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.