

2016ம் ஆண்டு முதல் நாள் வசூலில் 'கபாலி', 'தெறி' படங்களைத் தொடர்ந்து 'ரெமோ' இடம்பிடித்திருப்பதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ராஜா தயாரித்திருக்கிறார்.
அக்டோபர் 7ம் தேதி வெளியான இப்படத்தின் முதல் நாள் வசூல் 'கபாலி', 'தெறி' ஆகிய படங்களைத் தொடர்ந்து இடம்பெற்றிருக்கிறது. முதல் நாள் வசூல் மட்டும் சுமார் 7 கோடியில் இருந்து 8 கோடிக்குள் இருக்கும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள். இதனை தயாரிப்பு தரப்பும் உறுதிப்படுத்தியது.
மேலும், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூலை கண்டிப்பாக 'ரெமோ' முறியடிப்பது உறுதி என்று குறிப்பிட்டார்கள். தன்னுடைய நிறுவனத்தின் முதல் தயாரிப்பே இந்த சாதனையை செய்திருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர் ராஜா.
'ரெமோ' படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவிருக்கிறது. இதனையும் ராஜாவே தயாரிக்கவிருக்கிறார்.