

மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் 'மோகினி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது படக்குழு.
'நாயகி' மற்றும் 'கொடி' படத்தைத் தொடர்ந்து, மாதேஷ் இயக்கத்தில் உருவான 'மோகினி' படத்தில் நடித்து வந்தார் த்ரிஷா. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஜூன் 2ம் தேதி முதல் லண்டனில் 40 நாட்கள் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் 20 நாட்களும், 10 நாட்கள் பாங்காக்கிலும் படப்பிடிப்பு நடத்தியது படக்குழு.
'காஞ்சனா 2' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த குருதேவ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைப்பாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். பிரபல ஹாலிவுட் படமான 'ஹாரி பாட்டர்' படத்துக்கு கிராபிக்ஸ் காட்சிகளில் பணிபுரிந்த குழு இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சியில் பணிபுரிந்து வருகிறது.
தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், இப்படம் குறித்து இயக்குநர் மாதேஷ் "நவீன மற்றும் பராம்பரிய திகில் படங்களின் கலவையாக இருக்கும். அறிவியலுக்கும், திகிலுக்கும் இடையேயான பாலமாக த்ரிஷா இருப்பார். வேதங்களை அடிப்படையாக கொண்ட புராண விஷயங்களில் இக்கதை உலவுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால், அவை முடிவு பெறுவதைப் பொறுத்து படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.