

சி.வி.குமார் தயாரிப்பில் கலையரசன், ஜனனி, ஷிவதா நடிப்பில் உருவாகி வரும் 'அதே கண்கள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
'கபாலி' படத்தைத் தொடர்ந்து கலையரசன் நாயகனாக நடித்த படத்தை சி.வி.குமார் தயாரித்து வந்தார். ஜனனி ஐயர், ஷிவதா நாயர், பால சரவணன் ஆகியோர் நடித்து வந்த இப்படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கி வருகிறார்.
ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்துக்கு பெயரிடப்படாமலே சென்னையில் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது.
அப்படத்துக்கு 'அதே கண்கள்' என்று தலைப்பிட்டது படக்குழு. ரவிசந்திரன், காஞ்சனா நடிப்பில் திருலோகச்சந்தர் இயக்கி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அதே கண்கள்'. அப்படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்கி இப்படத்துக்கு தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
விஜயதசமியை முன்னிட்டு 'அதே கண்கள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது படக்குழு.