

'ஆல்தோட்ட பூபதி' பாடல் வரிகள் தான் நன்றாக இருக்கிறது என வாலி எழுதிய பாடல் வரிகளை தூக்கியிருக்கிறார் மிஷ்கின்.
வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் 'யூத்'. இப்படத்தின் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மிஷ்கின்.
இப்படத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆல்தோட்ட பூபதி' பாடலை எழுதியபவர் கபிலன். படத்தில் அந்த இடத்தில் வரும் பாட்டுக்காக மறைந்த பாடலாசிரியர் வாலியிடம் சொல்லி பாடல் வரிகளை எழுதி வாங்கியிருக்கிறார். அதற்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டு, மணிசர்மாவும் அவ்வரிகளுக்கு இசையமைக்கத் தொடங்கி இருக்கிறார். சங்கர் மகாதேவனை பாடுவதற்கு அழைத்திருக்கிறார்கள்.
அப்போது மிஷ்கின், வின்சென்ட் செல்வாவிடம் சென்று "கபிலன் என்ற என் நண்பர் இருக்கிறார். மணிசர்மாவின் இசைக்கு 'ஆல்தோட்ட பூபதி' என்று தொடங்கும் வரிகளோடு எழுதியிருக்கிறார். நன்றாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார். தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவருமே 1 லட்சம் ரூபாய் கொடுத்தாகிவிட்டது, மாற்றவே முடியாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
சங்கர் மகாதேவன் பாடல் வரிகளை ஆங்கிலத்தில் எழுதி தான் பாடுவார். இசையமைப்பாளர் மணிசர்மாவுக்கு தமிழ் தெரியாது. இயக்குநர் மிஷ்கின் தான் அப்பாடல் பதிவின் போது உடன் இருந்திருக்கிறார். அவர் கபிலன் எழுதிய வரிகளை சொல்லிக் கொடுத்து பாடல் பதிவினை முடித்திருக்கிறார்.
அப்பாடலைக் கேட்ட தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவருமே ஆச்சர்யப்பட, இறுதியில் இயக்குநர் வின்சென்ட் செல்வா "இதான்டா நல்லாயிருக்கு. இதுவே இருக்கட்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
முந்தைய பாகம் - >அறுந்த ரீலு 22: பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட 'சந்திரமுகி 2'