

‘கோப்ரா’ படத்துக்கு பிறகு நடிகர் விக்ரம், இயக்குநர் அஜய் ஞானமுத்து மீண்டும் இணைய உள்ளனர். ட்விட்டர் ஸ்பேஸில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
'மஹான்' படத்திற்கு பிறகு, நடிகர் விக்ரம் இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் கைகோத்திருக்கும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்ரம் 7 வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள இப்படம் வரும் 31 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.
இதனை அடுத்து நேற்று இரவு ‘கோப்ரா’ படக்குழுவினருடன் நடிகர் விக்ரமும் ட்விட்டர் ஸ்பேசில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். மேலும் படம் குறித்தான பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.
அதில் விக்ரம் பேசும்போது, ''மூன்று வருடங்களுக்குப் பிறகு என் படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது என்பதே எனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம் தான். நானும் துருவ்வும் முதல் முறையாக இணைந்து நடித்த ‘மஹான்’ திரைப்படம் தியேட்டரில் வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால், அது நடக்காமல் போனதில் வருத்தம் தான். ஆனால், அதற்கெல்லாம் சேர்த்து தற்போது ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ என அடுத்தடுத்து என் படங்கள் வெளியாக இருப்பதில் மகிழ்ச்சி.
‘கோப்ரா’ கதை வித்தியாசமானது. இதில் எத்தனை கெட்டப் எனக்கு என நிறைய பேர் கேட்கிறார்கள். நிஜமாக எனக்கு நினைவில்லை. அதே போல, படத்தில் கெட்டப் போட வேண்டுமே என்று இத்தனை திணிக்கவில்லை. கதைக்குத் தேவைப்பட்டது.
‘கோப்ரா’ படத்திற்காக ரஷ்யாவில் படப்பிடிப்பு செய்தோம். கிட்டத்தட்ட மைனஸ் 27’C குளிர் இருந்தது. படப்பிடிப்பு செய்ய கடினமான சூழலில் அதை எல்லாம் பார்க்காமல் நடித்துள்ளோம். படத்தின் டிரெய்லர் படம் வெளியாவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு நிச்சயம் வெளியாகும். தவிர, 62-வது படத்தில் மீண்டும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் இணைய உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.