Last Updated : 18 Aug, 2022 01:39 PM

1  

Published : 18 Aug 2022 01:39 PM
Last Updated : 18 Aug 2022 01:39 PM

திருச்சிற்றம்பலம் Review: கைகூடிய தனுஷ் - மித்ரன் ஜவஹர் காம்போ

ரோலர்கோஸ்ட் வாழ்க்கையின் ஏதோ ஒரு நிறுத்தத்தில் உங்களுக்கான சர்ப்ரைஸ் நிகழ்ந்தே தீரும் என்பது தான் 'திருச்சிற்றம்பலம்' ஒன்லைன்.

தந்தை நீலகண்டன் (பிரகாஷ்ராஜ்) மீதான கோபத்தினால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் உணவு டெலிவரி பாயாக வேலையை செய்து வருகிறார் திருச்சிற்றம்பலம் (தனுஷ்). வீடு, வேலை என்ற அவரது வழக்கமான சுழலோட்டத்தில் சோகங்களையும், வலிகளையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளும் உற்ற தோழி ஷோபானா (நித்யா மேனன்). இப்படியான திருச்சிற்றம்பலத்தின் வாழ்வில் சில, பல காதல்கள் குறுக்கிட, அவை கைகூடியதா இல்லையா? என்பது மட்டுமல்லாமல், வாழ்க்கை அவருக்கு கொடுத்த இன்னொரு சர்ப்ரைஸையும் சேர்த்து ஃபீல்குட் எண்டர்டெயினராக உருவாகியிருக்கும் படம் தான் 'திருச்சிற்றம்பலம்'.

'உத்தமபுத்திரன்' படத்தையடுத்து ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப்பிறகு தனுஷூடன் கைகோத்திருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஜவஹர். இம்முறை நேர்த்தியான கதைக்களத்துடன் களமிறங்கியிருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலமே அதன் கதாபாத்திர தேர்வுகள் தான். நடிகர்கள் அனைவரும் அந்தந்த கேரக்டரில் பொருந்துவதோடு மட்டுமல்லாமல், கச்சிதமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

திருச்சிற்றம்பலமாக தனுஷ். கோட் சூட் போட்டுக்கொண்டு ஹாலிவுட் சென்று திரும்பினாலும், மீண்டும் சாதாரண டீசர்ட், பேன்ட்டுடன் நடுத்தர குடும்ப இளைஞனாகவும், பக்கத்துவீட்டு பையனாகவும் பொருந்தும் வித்தை அவருக்கே வாய்த்தது. அலட்டிக்கொள்ளாத நடிப்பு, தனித்த உடல்மொழி, தந்தையை 'அவன்' என கூறி அசால்ட்டாக நடப்பது, தாத்தாவை நண்பனாக டீல் செய்வது, சென்டிமென்ட் காட்சிகளில் உதட்டை மட்டும் நடிக்க வைப்பது மிரட்டுகிறார். 'கேர்ள் பெஸ்டி'க்கான அர்த்தத்தை கொடுக்கிறது நித்யா மேனனின் நடிப்பு. 'கண்ணாலே பேசினால் நான் என்ன செய்வேன' பாடல் உண்மையில் நித்யா மேனனுக்கு பொருந்துகிறது.

ராஷிகா கண்ணா, பிரியா பவானி சங்கர் கதாபாத்திரம் கேட்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். விருமனுக்குப்பிறகு தந்தையாக மீண்டும் பிரகாஷ்ராஜ். போலீஸ் அதிகாரியாக, தந்தையாக, அப்பாவிற்கு மகனாக மட்டுமல்லாமல், சில சென்டிமென்ட்காட்சிகளில் நம்மை சிலிர்க்க வைக்கிறார்.

எல்லாவற்றையும் கடந்து நிற்கிறது பாரதிராஜாவின் நடிப்பு. வெள்ளித்திரையில் மிகச்சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அவருடைய ஹ்யூமர் காட்சிகள் நம்மை சிரிக்க வைப்பதுடன் வெகுவாக ரசிக்கவும் செய்கிறது. நக்கல்,லொள்ளு என புதுமையான பார்வையாளர்களுக்கு பாரதிராஜாவின் நடிப்பு நிச்சயம் ஈர்க்கும். முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, மு.ராமசாமிக்கு சில காட்சிகள் என்றாலும் நடிப்பில் ஸ்கோர் செய்கின்றனர்.

படத்தில் சில இடங்களில் 'வேலையில்லா பட்டதாரி', 'யாரடி நீ மோகினி' சாயல் துருத்திக்கொண்டு தெரிவதை உணர முடிகிறது. குறிப்பாக தனுஷின் அப்பா கதாபாத்திரம் மறைந்த நடிகர் ரகுவரனை நினைவூட்டுகிறது. மற்றபடி, படத்தின் முதல் பாதி, பொறுமையாக நகர்ந்தாலும், ரசிக்கும்படியான காட்சிகளால் கவனம் பெறுகிறது. ஒன்லைனர்கள், அப்பா - மகன், தாத்தா - பேரன் உறவு, ஆண் - பெண் நட்பு, காதல், அவ்வப்போது சென்டிமென்ட் என ஒரு ஃபீல்குட் ட்ராமாவுக்கு தேவையான அம்சங்கள் இருப்பதால் படம் நம்மை ஆட்கொண்டுவிடுகின்றது. 'உன்னக்கண்டு தென்றலும் நின்று போனதுண்டு' என ஆங்காங்கே வரும் இளையராஜா டச் சிறப்பு.

பார்வையாளர்களின் கணிப்பை ஆங்காங்கே உடைப்பதன் மூலம் திரைக்கதையை வலுவாக்கியிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக, எதார்த்தை மீறி சண்டையிட்டு எதிரிகளை துவம்சம் செய்யாத நாயகனுக்கான காட்சிகள் தமிழ் சினிமாவின் வரம். தனுஷ் என்பதற்காக அவருக்கான ஹைப் காட்சிகள் கொடுக்காமல், முடிந்த அளவுக்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எதார்த்ததுடன் படமாக்கியிருக்கும் விதத்தில் இது ஒரு நல்ல மூவ். பாரதிராஜா தனது காதல் கதையை சொல்வது, தாத்தா - பேரன் இணைந்து மது அருந்துவது, சிங்கிள் ஷாட்டில் தனுஷ் பேசும் வசனம், நித்யாமேனன் - தனுஷூக்கான பாண்டிங் என படம் முழுக்க ரசிக்க நிறையவே இருக்கிறது.

நடுவில் 'மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே', 'தாய்க்கிழவி', பாடல்களுக்கு தன் குரல் மூலம் கூடுதல் உயிர் கொடுத்திருக்கிறார் தனுஷ். சந்தோஷ்நாராயணன் குரலில் 'தேன்மொழி' பாடல் தனித்து தெரிகிறது. அனிருத் இசையில் பாடல்கள் ஹிட். பின்னணி இசையிலும் இதம் சேர்க்கும் அனிருத் சில இடங்களில் மறதியில் விஐபி பேக்ரவுண்ட் மியூசிக்கை நுழைத்திருப்பதாக தோன்றுகிறது. ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில், 'கண்பாஷை பேசினால்' விஷூவல் திரையை அழகூட்டுகிறது. அவரின் அட்டகாசமான ஒளிப்பதிவை தேவையான இடங்களில் மட்டும் கச்சிதமாக வெட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா.

கதாபாத்திரங்கள் ஆழமாக எழுத்தப்பட்டுள்ளது. 'மனநோயாளியாக நீங்க' என்ற வசனம், பெண்களை டெம்ப்ளேட் மோடில் காட்டியிருப்பது, தந்தையின் மகன் பேசாமலிருப்பதற்கான காரணம் பெரிய அளவில் நியாயம் சேர்க்காத்து என சின்ன சின்ன மைனஸ் உண்டு. இதை தவிர்த்து, ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, எந்தவித கிறிஞ்சும் இல்லாமல் ஒரு உணர்ச்சிகரமான பொழுதுபோக்கு படத்தை எளிமையாகவும், எதார்த்தமாகவும் பதிவு செய்வது எப்படி என்பதை நிரூபித்திருக்கிறது படம்.

நீண்ட நாட்களுக்குப்பிறகு தமிழில் ரசிக்கும்படியான ஜனரஞ்சக சினிமாவாக வெளியாகியிருக்கும் 'திருச்சிற்றம்பலம்' திரையில் பார்வையாளர்களை ஏமாற்றாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x