

இந்தியா 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்தச் சூழலில், இந்திய தேசியத்தின் பெருமையையும், சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தும், பிரிட்டீஷுக்கு எதிரான இந்தியர்களின் குருதி வடிந்த போராட்டங்கள் வெகுஜன தளமான வெண்திரையில் எப்படி காட்சிப்படுத்தப்பட்டன. அவை பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. தமிழ் சினிமாவில் மிளிர்ந்த நாட்டுப்பற்று குறித்து பார்ப்போம்.
சுதந்திர வேட்கையை முதன் முறையாக தமிழ் சினிமாவில் திரை ஆக்கம் செய்த படம் 'தியாக பூமி'. 1939-ம் ஆண்டு வெளியான இப்படம் தான் சுதந்திர வேட்கையை முன்னிருத்தி எடுக்கப்பட்ட முதல் நாட்டுப்பற்று திரைப்படம் என கூறப்படுகிறது. இந்தப் படம் வெறும் நாட்டுப்பற்றை மட்டும் பேசவில்லை. மாறாக, வர்க்க ஏற்றத்தாழ்வு, தீண்டாமை குறித்தும் பேசியது. கர்நாடக இசையமைப்பாளரான பாபநாசம் சிவன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு, இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது இந்தப் படம் வெளியானது. காந்தி சக்கரத்தை சுழற்றுவது மற்றும் ஊர்வலம் செல்வது போன்ற உண்மையான காட்சிகளுடன் வெளியான இப்படம் வெற்றிகரமாக 22 வாரம் வரை ஓடியது. பின்னர் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது என்பது வரலாறு.
இதையடுத்து சுதந்திரத்திற்கு பின்பு தமிழ் சினிமா தேச பக்தியை ஊற்றி வளர்க்க ஆரம்பித்தது. தேசியத்தையும், நாட்டுப்பற்றையும் கருப்பொருளாக கொண்ட படங்கள் திரையரங்குகளில் அடுத்தடுத்து வரத் தொடங்கின. உதாரணமாக, 'சிவகங்கை சீமை' (1957), வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) மற்றும் கப்பலோட்டிய தமிழன் (1961) படங்களை குறிப்பிடலாம்.
வெகுஜன ஊடகமான சினிமாவில் நாயக பிம்பத்தின் வழியே தேசியவாத விதை தூவப்பட்டது. மேற்கண்ட மூன்று படங்களை எடுத்துக்கொள்வோம். மூன்றிலுமே காலனித்துவதற்கு எதிராக நின்ற இந்திய வீரர்களின் புகழை இந்தப் படங்கள் பறைசாற்றின. அதிலும் குறிப்பாக 'வீரபாண்டிய கட்டபொம்மன்'படத்தில் சிவாஜி பேசும், 'வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி?' வசனம் தமிழர்களின் உணர்வுடன் கலந்தது.
தொடர்ந்து, 70 மற்றும் 80 காலக்கட்டத்தில் தேசபக்தி கருத்துக்கள் கொண்ட படங்களின் வரவு சற்று குறைந்தது. 90-களில் மணிரத்னத்தின் ரோஜா (1992), பம்பாய் (1995) மற்றும் உயிரே (1998) படங்கள் மூலம் மீண்டும் தேசபக்தி தொடர்பான படங்கள் வரத்தொடங்கின. ஆனால், மணிரத்னத்தின் படங்கள் தீவிரவாதத்தைப் பின்னணியாகக் கொண்டவை. இதனிடையே, வந்த படங்கள் அனைத்தும் பாகிஸ்தானையும், தீவிரவாதத்தையும் முன்னிறுத்தியே எடுக்கப்பட்டன.
குறிப்பாக, அர்ஜூன், விஜயகாந்த் இருவரும் இணைந்து தமிழ் சினிமாவை தேசபக்திக்கான தளமாக மாற்றி ஆக்கிரமித்திருந்தனர். 'நரசிம்மா', 'சுதேசி','வல்லரசு', 'சேதுபதி ஐபிஎஸ்', 'உளவுத்துறை' போன்ற படங்களில் விஜயகாந்தும், 'ஜெய் ஹிந்த்' மூலம் அர்ஜுனும் தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றனர்.
கமலின் 'குருதிப்புனல்' திரைப்படமும் இவற்றில் குறிப்பிட வேண்டியவை. அதேபோல சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து தேசியவாதம், மதவாதம் குறித்து பேசியது கமலின் 'ஹேராம்'. 2000-க்கும் பிறகும், கூட, 'உன்னைப்போல் ஒருவன்', 'துப்பாக்கி', 'விஸ்வரூபம் 1 மற்றும் 2' படங்கள் வந்து கொண்டுதான் உள்ளன.
ஆனால் மேற்கண்ட படங்கள் தீவிரவாதத்தை முன்னிருத்தி தேசபக்தியை பறைசாற்றிய நிலையில், 'மதராசப்பட்டிணம்' மீண்டும் சுதந்திர போராட்ட காலத்தை தத்ரூபமாக காட்சிப்படுத்தியது.
இந்தியில் அவ்வப்போது சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட படங்கள் வருவதுண்டு. தமிழ் சினிமாவிலும் மீண்டும் சுதந்திர போராட்டத்தை பின்னணியாக கொண்ட படங்களை இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்சிப்படுத்த வேண்டும் என்பதும், மறக்கப்பட்ட சுதந்திரப் போராளிகளை படங்களின் மூலம் ஆவணப்படுத்த வேண்டும் என்பதுமே திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.