Last Updated : 15 Aug, 2022 04:39 PM

 

Published : 15 Aug 2022 04:39 PM
Last Updated : 15 Aug 2022 04:39 PM

இந்தியா @ 75: தமிழகமும் தேசியமும் - தமிழ் சினிமா வழி பயணம்

நடிகர் நாகேஷின் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் ஒன்று ‘திருவிளையாடல்’ தருமி. ஆயிரம் பொற்காசுகளுக்காக அழுது புலம்பும் அந்தக் கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரிட்களில் ஒன்று. சிவனிடம் கேள்வி கேட்கும் தருமி இப்படி ஆரம்பிப்பார், ‘பிரிக்க முடியாதது என்னவோ...’, ‘பிரியக்கூடாது... சேர்ந்தே இருப்பது...’ என அது நீளும். அந்தக் கேள்வி பதிலை தமிழ் சினிமாவை மையப்படுத்தி நாம் இப்போது பேசி பார்த்தால் முதல் கேள்விக்கான பதில் இப்படித்தான் வரும், பிரிக்க முடியாதது என்னவோ - தமிழகமும் தேசியமும் , சேர்ந்தே இருப்பது - தமிழ் சினிமாவும் தேசியமும்... இப்படி நீளும் அந்த அளவுக்கு மற்ற எந்த இந்திய மொழி சினிமாவை விடவும் இந்திய தேசியத்தை பேசிய தமிழ் சினிமா கதைகள் ஏராளம்.

1930-களில் பேசத் தொடங்கியிருந்த தமிழ் சினிமா சுதந்திரப் போராட்ட காலங்களில் தேசபக்தியை ஊட்டினாலும் அதில் உள்ளூர்தன்மையே மேலோங்கி இருந்தது. நாடு விடுதலை அடைந்த பின்னர் நாயக பிம்பங்களின் வழி சமூக அவலங்களை பேசிய சினிமாவில் தேசியத்தின் இடத்தை திராவிடம் எடுத்துக் கொண்டது. ஒரு கட்டத்தில் அந்தப் போக்கும் அயற்சியை ஏற்படுத்த, எண்பதுகளில் உள்ளூர் கதைகளில் கவனம் செலுத்தியது. அப்போதும் கூட ஒரு பட்டாளத்தான் கதாபாத்திரத்தை கதைக்குள் உலவ விட்டு தேசியத்துடனான தனது உறவை உறுதிப்படுத்திக் கொண்டது.

பெரியளவில் சமூக அரசியல் கொந்தளிப்புகள் இல்லாத தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நாடு தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் என வேகமான மாற்றத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது. தனியார் தொலைக்காட்சிகளின் புற்றீசல் வருகை, மேற்கத்திய இசை வரவு, காட்சியாக்கங்களுக்கு தங்களைப் பழக்கப்படுத்தும் புதிய தலைமுறை ஒன்று உருவாகத் தொடங்கியிருந்தது. இந்த புதிய ரசனைக்காரர்களுக்கு தீனிபோடும் தேவை தமிழ் சினிமாவிற்கு எழுந்தது. அடுத்து தமிழ் சினிமா பயணிக்க வேண்டிய அந்தப் பாதையை அழகாய் அடையாளம் காட்டினர் தயாரிப்பாளர் கே.பாலச்சந்தர் - இயக்குநர் மணிரத்னம் இணை.

உண்மைக் கதை ஒன்றை மையமாக வைத்து படம் எடுத்த மணிரத்னம், தமிழ் நிலத்திற்கு துளியும் சம்பந்தம் இல்லாத பனிப்படர்ந்த காஷ்மீர் மலைத்தொடர்களை தனது ‘ரோஜா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி, இஸ்லாமியத் தீவிரவாதிகள் பேராபத்தானவர்கள் என்ற புதிய தேசியத்திற்கான கதைக்களத்தை உருவாக்கிக் கொடுத்தார். கதை மட்டும் இல்லை... கதைக்கான இசையும் ஒரு தேசியத்தன்மையுடனேயே இருந்தது. அதனால் அந்த இசைக்கு தேசிய விருது கொடுத்து இந்திய அரசு அங்கீகரித்தது. சுதந்திர, குடியரசு தின நாட்களில் பொதிகையில் ஒளிபரப்பத் தகுந்த படமான ரோஜா, அது பேசிய புதிய தேசியம் மாற்றியிருந்தது.

அதற்கு பிறகு மணிரத்னம் தான் அமைத்த தேசிய பாதையில் விலகவே இல்லை. அவரைத் தொடர்ந்து அந்தப் பாதையில் பணிக்கத் தொடங்கியவர் நடிகர் அர்ஜூன். 1994-ம் ஆண்டு ‘ஜெய்ஹிந்த்’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்திருந்தார். உள்ளூர் காவல்துறை அதிகாரியான அர்ஜூன், தண்டனைக் கைதிகள் சிலரின் உதவியுடன் தீவிரவாதிகளை களையெடுப்பதே கதை. அதைத் தொடர்ந்து குருதிப்புனல், செங்கோட்டை, வந்தேமாதரம், ஒற்றன் என தொடர்ந்து தேசியம் பேசிய படங்கள் நடித்திருப்பார்.

அவருக்கு அடுத்த அந்த பாதையில் மிடுக்காக பயணித்தவர் கேப்டன் விஜயகாந்த். போலீஸ் கதாபாத்திரத்திற்கு தத்துக் கொடுக்கப்பட்டவர் போல தனது பல படங்களில் உள்ளூர் போலீஸ் அதிகாரியாக அல்லது மத்திய அரசுக்கு உதவும் தமிழக போலீஸ் அதிகாரியாக பல படங்களில் தீவிரவாதிகளை வேட்டையாடியிருப்பார். அதன்பிறகு பல நடிகர்கள் இந்த புதிய தேசிய ஃபார்முலாவான தீவிரவாத ஒழிப்பு பாதையில் பயணிக்கத் தொடங்கினர். தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக பொங்கி எழும் உள்ளூர் போலீஸ் கதாநாயகர்களும், "பட்டாளத்தில் பாதி போலீஸ்", "தேசிய கீதம் பாடும் போது அசையக்கூடாதுனு தெரியல" என வீர வசனம் பேசி இந்திய தேசியத்துடனான தமிழ் சினிமாவின் உறவை புதுப்பித்துக் கொண்டிருந்தனர்.

காட்சிகளுக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் தேசிய தலைவர்களின் படங்களும் அவர்கள் குறித்த வசனங்களும் அப்போதைக்கு அப்போது தமிழ் சினிமாவில் தலைகாட்டி தமிழர்களுக்கு தேசியத்தை நினைவுட்டிக் கொண்டிருக்கின்றன.

தனித் தமிழ்நாடு, திராவிட நாடு போன்ற குரல்கள் ஒங்கி ஒலித்தாலும் இந்திய தேசியத்திற்கான வேர்கள் தமிழ் மண்ணில் ஆழமாகவே ஊடுறுவி இருக்கின்றது. அது சுதந்திரம், குடியரசு தினங்களில் கொடியேற்றுவதோடு நின்றுவிடாமல், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், வாய்ப்புக் கிடைக்கும் வடிவங்களில் எல்லாம் வெளிப்படுகின்றது. தமிழ் சினிமாவும் அந்த தேசிய உணர்வை தன்னுள் பரவலாக பாதுகாத்து வைத்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x