

''என் கணவர் சாகருக்கு யாராவது அப்படிச் செய்திருந்தால் என் வாழ்க்கை மாறி இருக்கும்'' என நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை மீனா. அண்மையில் வெளியான நடிகர் ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த வித்யாசகருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
நுரையீரல் பிரச்சினைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர். கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார்.
இந்நிலையில் நடிகை மீனா சர்வதேச உடல் உறுப்பு தானத்தையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''ஓர் உயிரை காப்பதை விட சிறந்தது வேறு எதுவும் கிடையாது. உயிரைக் காப்பாற்றும் உன்னதமான விஷயம், உடல் உறுப்பு தானம். நோயுடன் போராடும் பலருக்கும் மறுவாழ்க்கை கொடுக்கும் வரம். அதை நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்துள்ளேன். என் கணவர் சாகருக்கு யாராவது அப்படிச் செய்திருந்தால் என் வாழ்க்கை மாறி இருக்கும்.
ஓர் உடல் உறுப்பு தானத்தின் மூலம் 8 உயிர்களைக் காப்பாற்ற முடியும். அனைவரும் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது தானம் வழங்குபவருக்கும் பெறுபவருக்கும் மருத்துவர்களுக்கும் இடையில் நடக்கும் விஷயமல்ல. இது குடும்பம், உறவினர்கள், சக ஊழியர்கள் உட்பட அனைவரும் சம்பந்தப்பட்டது.நான் என் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். இதுவே நம் பரம்பரையை வாழ வைக்கும் சிறந்த வழியாக இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.