Published : 14 Aug 2022 12:09 PM
Last Updated : 14 Aug 2022 12:09 PM

விருமன் - திரை விமர்சனம்

தனது அம்மாவின் (சரண்யா பொன்வண்ணன்) இறப்புக்கு காரணமான அப்பா முனியாண்டி (பிரகாஷ்ராஜ்) மீது தீராத கோபத்தில் இருக்கும் விருமன் (கார்த்தி), தாய்மாமா (ராஜ்கிரண்) வீட்டில் வளர்கிறார். பணத்தைப் பெரிதாக நினைக்கும் ஆணவ அப்பாவுக்கு உறவும் அன்பும்தான் பெரிது என்பதை புரிய வைக்க நினைக்கிறார் விருமன். அதை எப்படி உணர வைத்தார் என்பது படம்.

அப்பாவின் தியாகத்தைப் புகழ்ந்திருக்கும் தமிழ் சினிமாவில், சர்வாதிகாரம் கொண்ட, திமிர் பிடித்த, ஆணாதிக்க அப்பாவை இயல்பாகக் காட்டி இருக்கிறார், இயக்குநர் முத்தையா. அப்பா - மகன் மோதல்தான் ஒன்லைன் என்ற பிறகு, அதை நோக்கி செல்லும் கதையில், அண்ணன், தம்பி பாசம், காதல், மோதல், குடும்ப வன்முறை என கொத்தான கமர்ஷியல் படத்தை கெத்தாகக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் காம்பினேஷனில் வந்த ‘கொம்பன்’ ரசனை, இதில் மிஸ்சிங்!.

கைகளில் மடித்துவிடப்பட்ட சட்டையும் கூலிங் கிளாஸ் கண்ணாடியும் தூக்கிக் கட்டிய வேட்டியுமாக, ’விருமன்’ கேரக்டரில் தோதாக அமர்ந்துகொள்கிறார் கார்த்தி. அவர் நடித்த கிராமத்துப் படங்கள் அவ்வப்போது ஞாபகத்துக்கு வந்தாலும் இதில் அவர் ஒரு படி மேல். அப்பாவுக்கு எதிராக அவர் ஆவேசம் காட்டுவது அண்ணன்களுக்கு உதவுவது, ஆக்‌ஷன் காட்சிகளில் புரட்டி எடுப்பது என வழக்கமான கிராமத்து ஹீரோவை கண்முன் நிறுத்துகிறார்.

அதிதி ஷங்கர், ஆச்சரிய அறிமுகம். முதல் படம் என்கிற அடையாளம் இல்லாமல், நடிப்பிலும் நடனத்திலும் அனுபவ நடிகையாகவே தெரிகிறார். தேன்மொழி கேரக்டரில், தேனி பெண்ணாகவே மாறி ரசிக்க வைக்கிறார். பிரகாஷ் ராஜுக்கு, கவுரவத்தையும் பணத்தையும் பெரிதாக நினைக்கும் தாசில்தார் கேரக்டர். ’நாலு பிள்ளை பெத்தேன், நாலாவது பிள்ளை நரகாசூரனா வந்து நிற்குது’ என அவர் விருமனை கண்டு கொதிக்கும்போது கோபக்கார அப்பாவை கண்முன் நிறுத்துகிறார். பாசக்காரத் தாய்மாமாவாக ராஜ்கிரண். அவருக்கான காட்சிகள் குறைவு என்றாலும், கார்த்தியின் வீரம் பேசும்போது நிமிர்ந்து நிற்கிறார். பந்தல் பாலு கருணாஸுக்கு ஒரு பிளாஷ்பேக்கும் கிளை மாக்ஸில் நெகிழ்ச்சி காட்சியும் இருக்கிறது.

குத்துக்கல்லு சூரி, கார்த்தியின் தோழனாக காமெடி ஏரியாவை கவனித்துக் கொள்கிறார். அம்மா சரண்யா, அதிதியின் அப்பா இளவரசு, விருமாயி பாட்டி வடிவுக்கரசி, நைனாசிங்கம்புலி, குத்தாலம் ஓ.ஏ.கே.சுந்தர், பதினெட்டாம் பாண்டியன் ஜி.எம்.சுந்தர், ஏலங்களுக்குச் சென்று தொகையை ஏற்றும் ‘ஏழரை’ கோஷ்டி ஆர்.கே.சுரேஷ், குழவிக்கல்லு இந்திரஜா, முத்துலட்சுமி அருந்ததி, மகன்கள் கவிஞர் வசுமித்ர, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார் என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம். ’கஞ்சாப்பூ கண்ணால’ உட்பட பாடல்களிலும் பின்னணி இசையிலும் யுவன் ராஜாங்கம் தனித்துத் தெரிகிறது. செல்வகுமாரின் ஒளிப்பதிவு, தேனி பகுதியின் கிராமத்து அழகை புழுதி பறக்கப் பதிவு செய்திருக்கிறது.

‘நாலு திசைக்கு வெளிச்சம் கொடுக்கிற சூரியன் மாதிரிதான் என்னைக்கும் நீ இருக்கணும்’ என்பது போன்ற வசனங்களும் காட்சிக்கு காட்சி வந்துவிழும் சொலவடைகளும் ரசிக்க வைத்தாலும் முதல் பாதியில் வரும் நீளமான காட்சிகள் நெளிய வைக்கின்றன. நாயகனின் அம்மா நினைவுகளை வைத்து அமைக்கப்பட்ட சென்டிமென்ட் காட்சிகள், தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அடுத்தது என்ன என்பதை எளிதாகவே யூகித்துவிட முடிகிறது. திரைக்கதையில் புதுமையும் சுவாரஸ்யமும் இல்லை என்றாலும் அந்த கேரக்டர்களை தாங்கியிருக்கும் நடிகர்களால் ‘விருமன்’ ரசிக்க வைக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x