

இயக்குநர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள 'லைகர்' திரைப்படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய் தேவரகொண்டா, ''சென்னை வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
நோட்டா படத்தின் ஷூட்டிங்கின்போது கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கற்றுகொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். லைகர் நிச்சயம் 'மரண மாஸ்' சினிமாவாக இருக்கும். நீங்கள் என்ஜாய் செய்வீர்கள் என நம்புகிறேன். லைகர் படத்தின் ஸ்கிரிப்ட் கேட்டதும் பிடித்துப்போனது. பேச்சுக்குறைபாடு இருப்பவர்களுக்கு இந்தப்படம் நம்பிக்கை கொடுக்கும்'' என்றார்.
தமிழில் யாருடன் இணைந்து படம் நடிக்க விருப்பம் என்ற கேள்விக்கு, ''லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், பா.ரஞ்சித் போன்ற தமிழ் இயக்குநர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களிடம் தொலைபேசியில் பேசியும் இருக்கிறேன். அவர்கள் நாடினால் அவர்களுடன் இணைந்து படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். அதுவரை தமிழில் டப்பிங் செய்து படங்களை வெளியிட்டு வருகிறேன். லோகேஷ் அவரது யூனிவர்ஸை கொண்டு வந்தால் அதில் பயணிக்க நான் தயாராக இருக்கிறேன். அது விரைவில் நடக்கும் என தோன்றுகிறது'' என்றார்.
மைக்டைசன் உடனான நடிப்பு குறித்து கேட்கையில், ''ஒருமுறை மைக் டைஸன் தவறுதலாக என் முகத்தில் குத்திவிட்டார். அந்த நாள் முழுவதும் நான் வலியால் கஷ்டப்பட்டேன்'' என்றார். தொடர்ந்து, ''தமிழ் ரசிகர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் என்னுடைய படங்கள் தமிழில் ரிலீஸாக வேண்டும் என விரும்புகிறேன். குறிப்பாக தமிழ் ரசிகர்கள், 'தல', 'மரண மாஸ்' என உற்சாகமாக கத்துவது எனக்கு பிடிக்கும்'' என்றார்.