Published : 12 Aug 2022 04:28 PM
Last Updated : 12 Aug 2022 04:28 PM

கமல்ஹாசன் 62 - விருதுகளின் நாயகன் பெற்ற அங்கீகாரங்களின் பட்டியல்

நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 62 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவரது முதல் படமான 'களத்தூர் கண்ணம்மா'வுக்கு இன்று வயது 62.

தனது 6-வது வயதில் இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி நடித்த 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார் அந்தச் சிறுவன். 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..' என்ற அந்த மழலை மொழியை கேட்டவர்களுக்கு அன்று தெரிந்திருக்காது, தமிழ் திரையுலகின் ஜாம்பவானாக அந்தச் சிறுவன் வரப்போகிறான் என்று. 'களத்தூர் கண்ணம்மா'வில் தொடங்கிய திரைப்பயணம் 'போர் கண்ட சிங்கம்' ஆக 'விக்ரம்' திரைப்படம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கமல் என்ற அந்த ஜாம்பவான் நாயகன் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 62 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஒரு நடிகராக, இயக்குநராக, திரைக்கதை எழுத்தாளராக, தயாரிப்பாளராக, பாடகராக, பாடலாசிரியராக அனைத்து துறையிலும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார் கமல்.

1982-ம் ஆண்டு 'மூன்றாம் பிறை' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவர், அடுத்த 5 ஆண்டுகளில் 'நாயகன்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மீண்டும் ஒரு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். 'இந்தியன்' படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவருக்கு, சிறந்த மாநில மொழி திரைப்படத்துக்காக தயாரிப்பாளராக 'தேவர் மகன்' படத்துக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது. 6 மொழிகளில் 232 படங்கள் நடித்து, 19 ஃபிலிம் பேர் விருதுகளையும், 8 மாநில அரசின் விருதுகளையும் பெற்றிருக்கிறார் கமல்.

4 தேசிய விருதுகளையும், 1980-ல் கலைமாமணி விருதை தமிழக அரசு சார்பிலும், 1990-ல் பத்ம ஸ்ரீவிருதையும், 2014-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும் இந்திய அரசு சார்பில் பெற்றது மட்டுமல்லாமல், ஃபிரான்ஸ் அரசு சார்பில் 'செவாலியர்' விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். விருதுகளின் நாயகனான கமல் திரைத்துறையில் நுழைந்து 62 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அவரது ரசிகர்கள் #63YearsOfKamalism என்ற ஹேஷ்டேக்குடன் கொண்டாடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x