நடிகைக்கு திறமை மட்டும் போதாது: சவரக்கத்தி நிகழ்ச்சியில் பூர்ணா உருக்கம்

நடிகைக்கு திறமை மட்டும் போதாது: சவரக்கத்தி நிகழ்ச்சியில் பூர்ணா உருக்கம்
Updated on
1 min read

படங்கள் வெற்றியடைந்தால் மட்டுமே நாயகியாக இருக்க முடியும், திறமை இருந்தால் போதாது என தெரிந்தது என்று நடிகை பூர்ணா உருக்கமாக பேசினார்.

ஆதித்யா இயக்கத்தில் மிஷ்கின், ராம், பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சவரக்கத்தி'. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து வில்லனாக நடித்திருக்கிறார் மிஷ்கின். இப்படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் நடிகை பூர்ணா பேசியது:

"நான் ஒரு நடன கலைஞர். சினிமாவுக்கு வரணும் நடிகையாக வேண்டும் என்ற எண்ணமே இல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து வந்தேன். கேரளாவில் இருந்து வந்த நான் முதலில் பரத்துடன் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், படங்கள் வெற்றியடைந்தால் மட்டுமே நாயகியாக இருக்க முடியும், திறமை இருந்தால் போதாது என தெரிந்தது. அதற்குப் பிறகும் படங்களில் நடித்தேன். ஆனால், அதிர்ஷ்டம் எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.

இனி சினிமா வேண்டாம். நடனம் மட்டும் தான் என் வாழ்க்கை என முடிவு செய்தேன். நடன வாத்தியாராக வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அப்போது தெலுங்கில் ஒரு படம் வெற்றியடைந்தது. மறுபடியும் நடிக்க ஆரம்பித்து, தெலுங்கில் சில படங்கள் பண்ணிக் கொண்டே இருந்தேன்.

தமிழில் படங்கள் வரும் போதெல்லாம், நல்ல படங்கள் வரட்டும் என்று காத்திருந்தேன். கமர்ஷியல் நாயகியாக தெரிவதை விட திறமையான நாயகியாக தெரிய ஆசை. மிஷ்கின் சார் படம் என்னிடம் வந்த போது நான் அன்றிரவு தூங்கவே இல்லை. நான் அவ்வளவு ரசிக்கிற ஒரு இயக்குநர், அவருடைய இயக்கத்தில் நடிப்பது எனது கனவு.

நிறைய பெரிய நாயகிகள் பட்டியல் எல்லாம் இருந்தது. எனது பெயர் அப்பட்டியலில் இறுதியாக தான் இருந்தது. அதிர்ஷ்டம் இந்தப் படம் எனக்கு வந்தது. நான் இந்த கதாபாத்திரத்தை சரியாக பண்ணியிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் தான். இங்கு ராம் சார் சொன்ன வார்த்தையால் எனது அம்மா மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார். நான் ஒரு நடிகையாக தெரிய வேண்டுமெ என நினைத்தது என் அம்மா தான். 'சவரக்கத்தி' டீஸர் பார்க்கும் போது என் அம்மா அழுதுவிட்டார்" என்று பேசினார் பூர்ணா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in