

விக்னேஷ் சிவன் - சூர்யா இணையும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 21ம் தேதி தொடங்குகிறது.
ஹரி இயக்கத்தில் 'சிங்கம் 3' படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. சமீபத்தில் மலேசியாவில் ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சியை படமாக்கிவிட்டு திரும்பி இருக்கிறது படக்குழு. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்துக்கு இன்னும் ஒரு சில காட்சிகளும், ஒரு பாடலும் படமாக்கப்பட இருக்கிறது. டிசம்பர் 16-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சூர்யா. அனிருத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
அக்டோபர் 21-ம் தேதி சூர்யா இல்லாமல் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க இருக்கிறது. 'சிங்கம் 3' படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு, நவம்பர் 2ம் தேதி முதல் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்காக மதுரையில் இடங்களைத் தேர்வு செய்து வருகிறது படக்குழு.
அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.