திரை விமர்சனம்: குருதி ஆட்டம்

திரை விமர்சனம்: குருதி ஆட்டம்
Updated on
2 min read

மதுரையின் நிழல் உலகை தன் வசமாக்கி வைத்திருக்கும் இரு தாதாக்கள் காந்திமதி (ராதிகா), துரை (ராதாரவி). இதில் காந்திமதியின் மகன் முத்து (கண்ணா ரவி), துரையின் மகன் அறிவு (பிரகாஷ் ராகவன்) ஆகிய இருவரும் கபடி வீரர்கள்.

பெற்றோரின் செல்வாக்கில் ஆடுகளத்திலும் ரவுடித்தனம் செய்கின்றனர். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சக்தியும் (அதர்வா) முரட்டுக் கபடி வீரன்.

ஒரு போட்டியில் ஏற்படும் சிறு கைகலப்பு, மோதலாகி, பின்னர் பெரும் பகையும், வன்மமும், துரோகமும் கொண்டதாக உருவெடுப்பதில், சக்தி வன்முறை சகதியில் இறங்கி அடிக்க நேரிடுகிறது. அதில் சக்தியும், அவனது எதிரிகளும், நண்பர்களும் என்ன ஆனார்கள் என்பது ‘குருதி ஆட்டம்’ கதை.

படத்தை எழுதி, இயக்கியுள்ளார் ஸ்ரீகணேஷ். ஆக்‌ஷன் த்ரில்லர் எனும் வழக்கமான ஜானரில் மதுரையை கதைக்களமாக்கிய அவர், மதுரை என்றாலே வன்முறை பூமி என்ற ஆகிவந்திருக்கும் சட்டகத்தையே தேர்ந்தெடுத்தது ஏமாற்றம்.

எளிய பின்னணி கொண்ட நாயகன் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுப்பதற்கு தேவையான சென்டிமென்ட் நன்றாகவே இணைக்கப்பட்டுள்ளது.

நாயகன் சக்திக்கும் (அதர்வா), தாதாமகனான முத்துவுக்கும் (கண்ணா ரவி)இடையே துளிர்க்கும் எதிர்பாராத நட்பு,சிலிர்ப்பு. அந்த நட்பால் விளையும் துரோகம், பழிவாங்கல், அதற்கு பிறகு ஒரு சிறுமியையும் அவளது குடும்பத்தையும் காப்பாற்ற தர்மசங்கடமான சூழ்நிலையில் நாயகன் மாட்டிக்கொள்வது என சில புதுமையான கதைச் சூழல்களும், சில சுவாரஸ்யமான காட்சிகளும் இப்படத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவிடாமல் காப்பாற்றுகின்றன.

அதர்வா, ராதிகா, ராதாரவி, பிரியாபவானிசங்கர் உள்ளிட்ட அனைவருமே சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். சண்டை காட்சிகளில் அதர்வாவின் உழைப்பு பளிச்சிடுகிறது. ஸ்டன்ட் மாஸ்டர் விக்கியின் திறமையும் வெளிப்படுகிறது. ராதிகாவின் நடிப்பு அனுபவம்அவர் ஏற்ற கதாபாத்திரத்தை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்த கைகொடுக்கிறது.

ராதாரவியின் வழக்கமான நக்கல்வசனங்கள் திரையரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகின்றன. நாயகனின் அக்கா, நோயால் வாடும் சிறுமியாக நடித்துள்ளவர்கள் மனதில் நிற்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ஆங்காங்கே கவனம் ஈர்க்கிறது.

நல்ல தொடக்கம், பிரபலமான நடிகர்கள் என எல்லாம் இருந்தும், மதுரையை மீண்டும் ரத்தத்தில் தோய்த்தது, கதைக் களத்தை கமர்ஷியல் அம்சங்களுக்குள் மூச்சுமுட்ட வைத்தது, குழப்பமான பாத்திர வார்ப்பு, அழுத்தமற்ற காட்சிகள், ஊகிக்கக்கூடிய திருப்பங்கள், பொறுமையை சோதிக்கும் நீளம் ஆகியவற்றால் இந்த குருதி ஆட்டம், அழுகுணி ஆட்டமாகி நம்மை ஈர்க்கத் தவறிவிடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in