

தமிழில் ரீமேக்காகும் 'க்ஷணம்' தெலுங்கு படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் ஒப்பந்தத்தில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.
ரவிகாந்த் இயக்கத்தில் ஆத்வி சேஷ், ஆதா ஷர்மா, அனுஷ்யா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'க்ஷணம்'. ஸ்ரீசரண் இசையமைத்த இப்படத்தை பி.வி.பி நிறுவனம் தயாரித்தது. பிப்ரவரி மாதம் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார் சிபிராஜ். அவருடைய தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், நாயகனாக சிபிராஜ் நடிக்கிறார். 'சைத்தான்' படத்தின் இயக்குநர் ப்ரதீப் இயக்குகிறார்.
இப்படத்தில் சிபிராஜ் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரம்யா நம்பீசன், சதீஷ், ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி, ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.