Published : 05 Aug 2022 05:06 PM
Last Updated : 05 Aug 2022 05:06 PM

குருதி ஆட்டம் Review - ஆரம்பம் அட்டகாசம்தான். ஆனால்..?

கபடி ஆட்டத்தில் தொடங்கும் பகை ஒருவனின் வாழ்க்கையை எப்படியெல்லாம் கபடி ஆடுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என மதுரையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் தாதா காந்திமதி (ராதிகா). தனது தாயின் ரௌடிசத்தை பயன்படுத்தி ஏரியாவில் கெத்து காட்டுகிறார் அவரது மகன் முத்துப்பாண்டி (கண்ணா ரவி). அவரது 'வெட்டுப்புலி' கபாடிக்குழுவுக்கும், சக்தியின் (அதர்வா)வின் 'பாசப்பட்டாளம்' கபாடி குழுவிற்குமான ஆட்டத்தில் 'வெட்டுப்புலி' அணி தோல்வியைத் தழுவ, அது மோதலாக வெடிக்கிறது.

இந்த மோதல் பழிவாங்கும் படலமாக உருப்பெற்று, அது எப்படி சக்தி (அதர்வா) வாழ்க்கையில் கபடி ஆடுகிறது என்பதையும், அந்த ஆட்டத்தில் சக்தி வென்றாரா? வீழ்ந்தாரா? என்பதையும் ஆக்‌ஷன் த்ரில்லராக சொல்ல முற்பட்ட படம்தான் 'குருதி ஆட்டம்'.

ஒரு பக்காவான ஆக்‌ஷன் த்ரில்லருக்கான ஒன்லைனை கையிலெடுத்திருக்கிறார் '8 தோட்டாக்கள்' இயக்குநர் ஸ்ரீகணேஷ். அப்படித்தான் படத்தின் முதல் பாதியையும் தொடங்கியிருக்கிறார். ராதிகாவின் மாஸ் இன்ட்ரோ, அதையொட்டிய கேங்க், ஜெயில் காட்சிகள், கபடி ஆட்டம் என திரைக்கதையின் ஆரம்ப ஸ்கேட்ச் நல்ல தொடக்கமாகவே இருந்தது. காதல் காட்சியை தவிர்த்து பார்த்தால் ஆவி பறக்கும் சூடான தேநீருக்கான பதம் கதையில் இழையோடியது. ஆனால், ஒரு கட்டத்தில் படம் ஹீரோயிசத்தை மட்டுமே நம்பி கதை நகரும்போது ஆறிப்போன தேநீராகிவிடுகிறது.

படத்தில் எதிரிகள் அடிவாங்குவதுபோல பல இடங்களில் லாஜிக்கும் சேர்ந்தே அடிவாங்குகிறது. அதேபோல எமோஷனல் காட்சிகள் மூலம் கதையை இழுத்துபிடிக்கும் இடங்களும் மேலோட்டமான எழுத்தால் உணர்வை கடத்த தவறிவிடுகிறது. இரண்டாம் பாதியில் எதற்காக ஏன் கொல்லப்படுகிறார்கள் என தெரியாமல் சரமாரியாக கொலைகள் நிகழ்கின்றன. அடிக்கடி வீசப்படும் கத்தியும், அருவாளும் பார்வையாளர்களின் கழுத்தையும் அவ்வப்போது கடந்து செல்கிறது. ஏராளமான கதாபாத்திரங்களால், தேவையான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்துவிடுகிறார்கள்.

முதல் பாதி படத்தை ஓரளவு தாங்கி நின்றபோதிலும், இரண்டாம் பாதியின் செயற்கைத் தனமும், எப்படி முடிப்பதென்று தெரியாமல் இழுத்துகொண்டு போன க்ளைமாக்ஸ் காட்சிகளும், பார்வையாளர்களை கன்வைன்ஸ் செய்ய முடியாத ட்விஸ்ட்டும் படத்துடன் ஒன்ற முடியாமல் தடுத்து விடுகிறது.

குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சிறுமி கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம் கவனிக்க வைக்கிறது. குறிப்பாக, 'நமக்கு பிடிச்சவங்க ஒரு தப்பு பண்ணிட்டா அந்த தப்பு முக்கியமா? நமக்கு பிடிச்சவங்க முக்கியமா?' என பேசும் வசனம் ஈர்ப்பு.

அதர்வா தனது மொத்த உழைப்பையும் செலுத்தி நடித்து கொடுத்திருக்கிறார். மதுரையைச் சேர்ந்த இளைஞனாக அங்க அடையாளங்களுடன், வட்டார மொழியை பேச முயன்று தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலுக்காகவும், ஆறுதல் சொல்லவும், அழுகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார் ப்ரியா பவானி சங்கர். இருப்பினும் நடிப்பில் குறை வைக்கவில்லை. ராதிகா சொர்ணாக்கா போல இல்லாமல், கெத்தான தாதாவாக மிளிர்கிறார். சோகத்தையும், திமிரையும் ஒரே சேர வெளிப்படுத்தும் விதத்தில் கவனிக்க வைக்கிறார்.

ராதாரவி குறைந்த காட்சிகள் வந்தால் கைதட்டல் பெறுகிறார். சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். கண்ணா ரவி கெத்தாக மதுரையை பிரதிபலிக்கும் இளைஞனாக நடித்து கொடுத்திருக்கிறார். வாட்சன் சக்கரவர்த்தி, வினோத் சாகர் பிகராஷ் ராகவன், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சிறுமி என அனைவரின் நடிப்பும் கதையோட்டத்திற்கு பலம்.

யுவனின் இசையில் பிண்ணனி இசை ஓகே என்றாலும், 'இது நம்ம யுவன் இல்லையே' என தோன்றும் அளவுக்கு சண்டைக்காட்சிகளில் மாஸான பிஜிஎம்கள் மிஸ்ஸிங்!

படத்தின் மற்றொரு பலம் ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி. சண்டையை மையமாக கொண்ட படம் என்பதால் அதை கச்சிதமாகவே திரையில் கொண்டு வந்திருக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது.

மொத்தத்தில், குருதி ஆட்டம் நல்ல தொடக்கம். ஆனால், ஆட்டத்தில் புகுந்த சில செயற்கைத்தனங்களும்,சமரசமும் அதன் பாதையை மடைமாற்றிவிட்டன.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x