'சிலர் அப்படி நினைப்பது தவறு; என் படத்தை புறக்கணிக்காதீர்கள்' - அமீர்கான் உருக்கம்

'சிலர் அப்படி நினைப்பது தவறு; என் படத்தை புறக்கணிக்காதீர்கள்' - அமீர்கான் உருக்கம்
Updated on
1 min read

''நான் நாட்டை நேசிக்காதவன் என சிலர் இதயபூர்வமாக நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. 'லால்சிங் சத்தா' படத்தை புறக்கணிக்காதீர்கள்'' என்று நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டில் உருவான 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தை இந்தியில், 'லால்சிங் சத்தா' என்ற பெயரில் தயாரித்து நடிக்கிறார் நடிகர் அமீர்கான். அத்வைத் சந்தன் இயக்கும் இப்படத்தில் நடிகை கரீனா கபூர் நடிக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இதனிடையே அண்மையில், 'பாய்காட் லால்சிங் சத்தா' (boycott Laal Singh Chaddha) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது. காரணம், கடந்த 2015-ம் ஆண்டு பேட்டி ஒன்றில் நடிகர் அமீர்கான் 'இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது' என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அவரது படங்கள் வெளியாகும் சமயங்களில் இதுபோன்ற ஹேஷ்டேக்குகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 'உங்கள் படங்களுக்கு எதிரான இதுபோன்ற பிரச்சாரங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் நடிகர் அமீர்கானிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ''ஆமாம். உண்மையில் நான் இது குறித்து வருத்தப்படுகிறேன்.இப்படியான பிரச்சாரத்தை பரப்பும் சிலர், இதயபூர்வமாக நான், நாட்டை நேசிக்கவில்லை என நம்புகிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது. சிலர் அப்படி நினைப்பது துரதிர்ஷ்டவசமானது.அப்படி இல்லை. தயவுசெய்து என் படத்தைப் புறக்கணிக்காதீர்கள். தயவு செய்து என் படத்தைப் பாருங்கள்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in