Published : 01 Aug 2022 08:34 AM
Last Updated : 01 Aug 2022 08:34 AM

இந்தி நடிகைகள் மட்டுமே ‘பத்மஸ்ரீ’ பெற தகுதியானவர்களா? - நடிகை ஜெயசுதா கேள்வி

தமிழில் ‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘பாக்தாத் பேரழகி’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் ஜெயசுதா.

தற்போது விஜயின் ‘வாரிசு’ உட்பட பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் திரைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.

இதையொட்டி, ஒரு தெலுங்கு சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியிருப்பதாவது: சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தாலும், யாரும் எனக்கு ஒரு பூங்கொத்துகூட கொடுத்தது இல்லை. இது ஒரு ஹீரோவாக இருந்தால், பெரிய கொண்டாட்டமாக இருந்திருக்கும்.

இந்த 50 ஆண்டுகால பயணத்தில், வெற்றி பெற்ற ஹீரோக்கள் கொண்டாடப்படுவதையும், நடிகைகள் குறைத்து மதிப்பிடப்படுவதையும் பார்க்கிறேன். ஒரு முன்னணி ஹீரோ சரியாக நடனம் ஆடாவிட்டால்கூட, ஹீரோயினைதான் இயக்குநர் குறை சொல்வார்.

தவிர, மும்பையில் இருந்து வரும் நடிகைகளுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அவர்களது நாய்க்குட்டிக்குகூட அறை ஒதுக்குகின்றனர். ‘‘இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் உங்களுக்கு ஏன் பத்மஸ்ரீ விருது கொடுக்கவில்லை?’’ என்று கேட்கின்றனர்.

இதற்கு என்னிடம் பதில் இல்லை. ஒருவேளை அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொடுத்திருக்கலாம். பத்மஸ்ரீ விருதுக்கு பாலிவுட் நடிகைகள் மட்டுமே தகுதியானவர்களா? மற்றவர்களுக்கு தகுதி இல்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x