

நடிகை வரலெட்சுமி நேற்று வெளியிட்ட ஒரு ட்வீட்டைத் தொடர்ந்து அவருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவியது. இதனை வரலெட்சுமி மறுத்துள்ளார்.
விஷால் - வரலெட்சுமி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக பங்கேற்று வந்தார்கள். சமீபத்தில் நடந்த விஷாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் வரலெட்சுமி பங்கேற்றிருந்தார்.
சமீபத்தில் விஷால் அளித்திருந்த ஒரு பேட்டியில், “லெட்சுமிகரமான பெண்ணுடன் என் திருமணம் நடைபெறும். நடிகர் சங்க கல்யாண மண்டபத்தின் பணிகள் முடிவடைந்தவுடன், அதில் திருமணம் செய்துகொள்வேன்” என்று கூறியிருந்தார். இது இவர்களின் காதல் பற்றிய செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக இருந்தது.
இந்நிலையில் வரலெட்சுமி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “சேர்ந்து இருப்பவர்கள் பிரியும் முறை இதை விட மோசமாக இருக்க முடியாது. ஒரு நபர் தனது 7 ஆண்டுகால உறவை தன் மேலாளர் மூலமாக முறித்துக்கொண்டார். உண்மையான காதல் எங்கே?” என்று குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஷாலுடனான அவரது காதல் முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.
ட்விட்டர் பதிவு குறித்து வரலெட்சுமியிடம் கேட்டபோது “அந்த ட்வீட்டில் முதலில் நான் என்னைப் பற்றி சொல்லவே இல்லை. அதற்கும் என் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை” என்றார்.