

எதையும் வித்தியாசமாகச் சிந்திக்கிறவர் செயல்படுகிறவர் என்று பெயர்பெற்றவரும், தமிழ் சினிமாவில் சோதனை முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறவருமான இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் எழுதி இயக்கி நடித்திருக்கும் ‘இரவின் நிழல்’ உலகின் முதல் நான் - லீனியர் சிங்கிள் ஷாட் சினிமா என்னும் அடையாளத்துடன் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியானது.
2017-இல் வெளியான ‘ரிச்சி’ என்னும் படத்தின் மூலம் இயக்குநரான கெளதம் ராமச்சந்திரனின் இரண்டாம் படம் ‘கார்கி’. சாய்பல்லவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் இந்தப் படத்தின் மீதும் ஓரளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
கடந்த ஜூலை 15 அன்று வெளியான இந்த இரண்டு படங்களிலும் பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு விவாதத்துக்குரிய விஷயமாகியிருக்கிறது.
‘கார்கி’ சிறுமியர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வல்லுறவை நம் சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை துணிச்சலுடனும் நேர்மையுடனும் பதிவுசெய்துள்ளது.
பாலியல் குற்றங்களைச் செய்கிறவர்கள் நம் குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ நம் வீட்டில் ஒருவராகவோ நம் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராகவோ இருந்தால் நாம் என்ன செய்வோம் என்று பார்வையாளர்கள் அனைவரையும் சுயபரிசீலனைக்கு உட்படுத்தியுள்ளது. அந்த வகையில் பாலியல் வல்லுறவைப் பேசிய சினிமாக்களில் ‘கார்கி’ மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
பாலியல் குற்றங்களை உண்மையாக எதிர்ப்பவர்கள் தமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் குற்றவாளிகளாக இருந்தால் எந்த சமரசமும் சால்ஜாப்பும் இன்றி அந்தக் குற்றத்தை எதிர்ப்பதோடு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கு ஆதரவாகச் செயல்படுவதில் எந்தச் சுணக்கத்தையும் காண்பிக்கக் கூடாது என்னும் உணர்வை இந்தப் படம் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
அதோடு தமக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளை பாலியல் குற்றத்தில் ஈடுபடுவடுவதை பெண்களை சீண்டுவதை கனவிலும் நினைத்துப் பார்க்காதவர்களாக வளர்க்க வேண்டும் என்னும் மன உறுதியையும் இந்தப் படத்தைப் பார்க்கும் பெற்றோர் அடைவார்கள்.
ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைதி செய்யப்பட்டுள்ள தன் தந்தைய மீட்பதற்கான போராட்டத்தைக் கையிலெடுக்கும் மகளாக அற்புதமாக நடித்திருந்தார் சாய் பல்லவி. அவருடைய கதாபாத்திர வடிவமைப்பு தமிழ் சினிமாவில் தற்சார்பும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் நேர்மையும் மிக்க ஆளுமைகளாக இருக்கும் பெண்கள் முதன்மைக் கதாபாத்திரங்களாக உருவெடுக்கும் வரவேற்கத்தக்க மாற்றத்தை இன்னும் சிறப்பாக பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
‘கார்கி’ படத்தில் ஒரு திருநங்கையை தன்னம்பிக்கையும் அற உணர்வும் மிக்க கடமை தவறாத நீதிபதியாக காண்பிடித்திருப்பதும் அதில் திருநங்கை சுதாவை நடிக்க வைத்திருப்பதும் திருநர் கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும் வெகுஜனப் படைப்புகளில் அவர்களுக்கான வெளியை உருவாக்குவதிலும் அடுத்தகட்ட முன்னேற்றம்.
‘இரவின் நிழல்’ திரைப்படத்தில் முதல் அரைமணிநேரம் படம் உருவான விதம் திரையிடப்படுகிறது. படத்தை எழுதி இயக்கியிருக்கும் பார்த்திபன் உட்பட படத்தில் பங்குபெற்ற ஒவ்வொருவரும் வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தி உழைத்திருப்பதை உணரமுடிகிறது.
ஒரே ஷாட்டில் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பில் எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தாலும் மீண்டும் முதலிலிருந்து படப்பிடிப்பு நடத்தியதும் இப்படி 21 முறை மீண்டும் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி 22ஆவது முறைதான் முழுப்படத்தையும் ஒரே அடியாக எடுத்து முடித்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது படக்குழுவினரின் அர்ப்பணிப்பு மீது பெரும் மதிப்பு ஏற்படுகிறது.
ஆனால், இந்தப் படத்தில் பெண் கதாபாத்திரங்கள் சிலவற்றின் சித்தரிப்பும் வசனங்களும் பெண்கள் தொடர்பான மிகவும் பழமையான பிற்போக்கான சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன. படத்தில் பிரதான கதாபாத்திரமான நந்து (பார்த்திபன்) பல குற்றங்களைச் செய்து வசதியான செல்வாக்கான மனிதராக உயர்கிறார். அவர் வாழ்வில் நான்கு பெண்கள் வருகிறார்கள். அவர்களில் இருவர் அவரை ஏமாற்றுகிறார்கள். ஒரு பெண் அவரைக் காதலிப்பதாகச் சொல்லிவிட்டு வேறொருவருட உறவில் இருக்கிறார்.
‘குடைக்குள் மழை’, ‘ஒத்த செருப்பு’, ‘இரவின் நிழல்’ என பார்த்திபன் இயக்கும் படங்களில் தொடர்ந்து பெண்கள், ஆண்களை ஏமாற்றுகிறவர்களாக காண்பிக்கப்படுகிறார்கள்.
ஏமாற்றும் பெண்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் தொடர்ந்து தன்னுடைய படங்களில் பெண்களை இப்படிச் சித்தரிப்பதன் மூலம் பெண்கள் என்றாலே ஆண்களை எளிதாக ஏமாற்றிவிடுவார்கள் என்னும் பொதுமைப்படுத்தப்பட்ட ஆண்மைய கருத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ வலுசேர்க்கிறார் பார்த்திபன்.
மேலும், படத்தில் நிறைய இரட்டை அர்த்த வசனங்களும் பெண்களை பாலியல் பண்டமாகக் கருதும் மனப்போக்கையே வெளிப்படுத்துகின்றன.
மக்கள் மதிப்பைப் பெற்ற அனுபவம் மிக்க படைப்பாளியான பார்த்திபனுக்கு இது அழகல்ல. அவருடைய மாறுபட்ட முயற்சிகளுக்கும் சினிமா மீதான அவருடைய காதலுக்கும் அர்ப்பணிப்புக்கும் என்றும் மரியாதை உண்டு. ஆனால், பெண் கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் இருக்கும் பிரச்சினைகளை தவிர்த்தால் அவர் மீதான நன்மதிப்பு மேலும் அர்த்தமுள்ளதாகும்.
- நந்தன்