Published : 25 Jul 2022 09:00 AM
Last Updated : 25 Jul 2022 09:00 AM

திரை விமர்சனம்: மஹா

நகரில் சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்துகொல்லப்படுவது தொடர்கிறது. இவ்வாறு தொடர் கொலைகளில் ஈடுபடும் சைக்கோ கொலையாளியை பிடிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த். நாயகியான ஹன்சிகாவின் மகளும் திடீரென்று கடத்தப்பட, குற்றவாளி மற்றும் சிறுமியை போலீஸும், ஹன்சிகாவும் தேடுகின்றனர். சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாளா? சைக்கோ சிக்கினானா? என்பது கதை.

அறிமுக இயக்குநர் ஜமீல், பழையகதையுடன் பயமுறுத்தும் த்ரில்லர்படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார். அதை சொன்ன விதத்தில் நிறையவே ஏமாற்றம்.

ஹன்சிகாவின் 50-வது படமான இதில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக, துணிச்சலாக நடித்திருக்கிறார். மகளை தொலைத்துவிட்டு நிற்கும் ஒரு தாயின் பரிதவிப்பையும், இயலாமையையும் இயல்பாக கடத்துகிறார் ஹன்சிகா.

மகளுடன் ஜாலி விளையாட்டு, காதலன் சிம்புவுடன் செல்லமான ரொமான்ஸ், கோபத்தில் போலீஸாரிடம் எரிந்து விழுவது, குற்றவாளியை கண்டதும் ஆவேசமாவது என அவரது நடிப்பில் முதிர்ச்சி.

சிம்புவுக்கு கெஸ்ட் ரோல்தான் என்றாலும் அவருக்காக ஒரு ஃபைட்டையும், பாட்டையும் சேர்த்துள்ளனர். ஆனால், அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஹன்சிகாவிடம் அவர் பேசும் காதல் வசனங்கள், சிம்புவின் சொந்த வாழ்க்கையை ஞாபகப்படுத்துவதால் ரசிக்க முடிகிறது.

வில்லனாக சுஜீத் ஷங்கர். ஏற்கெனவே பல படங்களில் சைக்கோ வில்லன்கள் செய்த அதே வில்லத்தனம், கொடூரத்தை காட்டுகிறார். அவர் சிறுமிகளை கடத்தி வைத்திருக்கும் ரத்தம் தோய்ந்த இடம், அருவருப்பை ஏற்படுத்துகிறது.

போலீஸ் அதிகாரியாக காந்த், காவல் ஆய்வாளராக தம்பி ராமையா, காவலராக கருணாகரன் ஆகியோர் கொடுத்த வேலைகளை செய்துள்ளனர். படத்தின் ஒரே ஆறுதல், ஜிப்ரானின் பின்னணி இசையும், லக் ஷ்மணின் ஒளிப்பதிவும்.

இடைவேளையில் வைத்திருக்கும் ட்விஸ்ட், ஆச்சரியத்தை கொடுக்கும் அடுத்த விநாடியே, இது இப்படித்தான் என எல்லாவற்றையும் எளிதாகஊகித்துவிட முடிகிறது. திரைக்கதையில் இன்னும் அழுத்தத்தை சேர்த்திருந்தால் ‘மஹா’ கவர்ந்திருப்பாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x