Published : 25 Jul 2022 09:00 AM
Last Updated : 25 Jul 2022 09:00 AM

கோலிவுட் அப்டேட்ஸ் | கரண் ஜோஹருக்கு நயன்தாரா ரசிகர்கள் கண்டனம்

பிரபல இந்தி இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் ‘காபி வித் கரண்’ என்ற நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்றார். அப்போது அவரிடம், “தென்னிந்திய சினிமாவில் யார் முன்னணி நடிகை?” என்று கரண் ஜோஹர் கேட்டார்.

“இப்போதுதான் நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடித்தேன்” என்றார் சமந்தா. இதன்மூலம் நயன்தாராதான் முன்னணி நடிகை என்பதை அவர் தெரிவித்தார். அதற்கு கரண் ஜோஹர், “என் லிஸ்ட்டில் அப்படி இல்லையே? நீங்கள்தான் (சமந்தா) நம்பர் ஒன் நடிகை என்று ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறதே” என்றார்.

இதனால், வலைதளங்களில் கரண் ஜோஹரை நயன்தாரா ரசிகர்கள் விளாசி வருகின்றனர். ‘நயன்தாரா, அனுஷ்கா, அசின், த்ரிஷா போன்ற தென்னிந்திய நடிகைகள் உங்கள் ‘வாரிசு’ நடிகைகளைவிட சிறப்பாக நடிப்பவர்கள். உங்கள் ‘குட்லக் ஜெர்ரி’கூட, நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ரீமேக்தான்..’ என்று பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

த்ரில்லரில் பிரபுதேவா

டார்க் ரூம் பிக்சர்ஸ், மினி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொய்க்கால் குதிரை’. பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் வரலட்சுமிசரத்குமார், ஜான் கொக்கேன், ஜெகன், பரத், பேபி ஆரியா நடித்துள்ளனர்.

பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு டி. இமான் இசை. சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ளார். ஆக.5-ல் வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்து. இதில் பிரபுதேவா, இமான், மதன் கார்க்கி, தயாரிப்பாளர் வினோத் குமார் கலந்துகொண்டனர்.

பிரபுதேவா பேசும்போது, “இயக்குநர் சந்தோஷ் குமார் சொன்ன கதையும், சொன்ன விதமும் பிடித்திருந்ததால் நடித்தேன். ஒற்றைக்காலுடன் ஆடும் நடனத்தை சதீஷ் நன்றாக வடிவமைத்திருந்தார். இது நல்ல த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது’’ என்றார்.

சூர்யா பிறந்தநாள்: பேருந்துக்கு அபராதம்

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள சவர - கொட்டியம் வழித்தடத்தில் ‘வடக்கும்நாதன்’ என்ற தனியார் பேருந்து சென்று வருகிறது. இதன் உரிமையாளர், நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர். கடந்த 23-ம் தேதி சூர்யா பிறந்தநாள் என்பதால், தனது பேருந்தின் முன் பகுதியில் சூர்யாவுக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டினார்.

பேருந்தின் இருபுறமும் பலூன்களை கட்டி தொங்கவிட்டார். கொல்லம் கச்சேரி சந்திப்பில் வந்தபோது, இந்த பேருந்தை போக்குவரத்து போலீஸார் நிறுத்தினர். ஓட்டுநரின் பார்வையை மறைக்கும் அளவுக்கு பலூன்கள் கட்டப்பட்டதாக, பேருந்துக்கு அபராதம் விதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x