Published : 23 Jul 2022 04:53 AM
Last Updated : 23 Jul 2022 04:53 AM

68-வது தேசிய விருதுகள் | ‘சூரரைப் போற்று’ படத்துக்கு 5 விருது - சிறந்த தமிழ்ப் படம் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’

தேசிய விருது வென்ற அபர்ணா பாலமுரளி, சூர்யா

புதுடெல்லி: தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படத்துக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், 68-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இதில், சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, பின்னணி இசை, சிறந்த திரைப்படம் என 5 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது.

சிறந்த நடிகர் விருது சூர்யாவுக்கும், ‘தன்ஹாஜி: அன்சங் வாரியர்’ என்ற இந்திப் படத்தில் நடித்த அஜய்தேவ்கனுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

மலையாளத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ படம் சிறந்த இயக்குநர், துணை நடிகர், பாடகி, சண்டை இயக்கம் ஆகிய 4 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது. இதில் இடம்பெற்ற ‘களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு’ பாடலைப் பாடிய பழங்குடியினப் பெண் நஞ்சம்மாவுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வசந்த் சாய் இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக சிறந்த எடிட்டர் விருது கர் பிரசாத்துக்கும், துணை நடிகை விருது லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கும் கிடைத்துள்ளது.

தேசிய விருதுகள் விவரம்

சிறந்த நடிகர் : சூர்யா (சூரரைப் போற்று), அஜய்தேவ்கன் (தன்ஹாஜி: அன்சங் வாரியர்)

சிறந்த நடிகை : அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)

இயக்குநர்: சச்சிதானந்தன் (அய்யப்பனும் கோஷியும்)

சிறந்த தமிழ்ப் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

தெலுங்கு திரைப்படம்: கலர் போட்டோ

மலையாளம்: திங்களாழ்ச்ச நிச்சயம்

கன்னடம்: டோலு

இந்தி: தூள்சிதாஸ் ஜூனியர்

சண்டை இயக்கம்: ராஜசேகர், மாஃபியா சசி, சுப்ரீம் சுந்தர் (அய்யப்பனும் கோஷியும்).

நடன இயக்குநர்: சந்தியா ராஜு (நாட்டியம்- தெலுங்கு)

பாடலாசிரியர்: மனோஜ் முண்டாசீர் (சாய்னா - இந்தி)

இசை அமைப்பாளர் (பாடல்கள்): தமன் (அலா வைகுந்தபுரம்லோ - தெலுங்கு)

பின்னணி இசை: ஜி.வி.பிரகாஷ்குமார் (சூரரைப் போற்று)

எடிட்டிங்: கர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

திரைக்கதை: ஷாலினி உஷா நாயர், சுதா கொங்கரா (சூரரைப் போற்று)

வசனம்: மடோன் அஸ்வின் (மண்டேலா)

ஒளிப்பதிவு: சுப்ரதிம் போல் (அவிஜாத்ரிக்)

பின்னணிப் பாடகி: நஞ்சம்மா (அய்யப்பனும் கோஷியும்)

பாடகர்: ராகுல் தேஷ்பாண்டே (மி வசந்த்ராவ்- மராத்தி)

சிறந்த ஒலிப்பதிவு: விஷ்ணு கோவிந்த்,  ஷங்கர் (மாலிக், மலையாளம்)

குழந்தை நட்சத்திரம்: அனிஷ் மங்கேஷ் கோசவி (தக் தக் -மராத்தி)

துணை நடிகர்: பிஜு மேனன் (அய்யப்பனும் கோஷியும்)

துணை நடிகை: லட்சுமி பிரியா சந்திரமெளலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

பிரபலமான திரைப்படம்: தன்ஹாஜி: அன்சங் வாரியர்

அறிமுக இயக்குநர்: மடோன் அஸ்வின் (மண்டேலா)

சிறந்த திரைப்படம்: சூரரைப் போற்று

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “68-வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், விருதுகளைக் குவித்து தமிழ்த் திரையுலகுக்கு பெருமை சேர்த்துள்ள தம்பி சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ‘சூரரைப் போற்று’ படக் குழுவினருக்கும், வசந்த், லட்சுமி பிரியா, ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படக் குழுவினருக்கும், மடோன் அஸ்வின், யோகிபாபு உள்ளிட்ட ‘மண்டேலா’ படக் குழுவினருக்கும் எனது பாராட்டுகள். சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த, முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது விருது

‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்துக்காக விருது பெற்றுள்ள எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் கூறும்போது, “வணிகப் படமாக அல்லாமல், தரமான படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் வசந்த். இதற்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இது எனக்கு 9-வது தேசிய விருது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x