

வெற்றிமாறன் இயக்கும் ’விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘அசுரன்’ திரைப்படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் ’விடுதலை’. இதில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் ’துணைவன்’ கதையை தழுவி இப்படம் உருவாக்கப்படுகிறது.
இதன் 4-வது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் அடுத்த சிறுமலையில் நடந்தது. இதற்காக பிரம்மாண்டமாக கிராமம் செட் அமைக்கப்பட்டது. கலை இயக்குநர் ஜாக்கி, நிஜ கிராமம் போலவே இந்த அரங்கத்தை அமைத்திருந்தனர். இங்கு விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதற்காக படக்குழுவை சேர்ந்த 450 பேர் சிறுமலை பகுதியில் தங்கி பணிபுரிந்தனர். விரைவில் இதன் ஐந்தாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இந்தப் படத்தில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சூர்யா பழங்குடியின சிறுவன் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. எனினும் படக்குழு விரைவில் இதை அதிகாரபூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.