

ரவுடிகளால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் ஒருவரை காப்பாற்றுகிறார் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் சத்யா (ராம் பொத்தினேனி). அவ்வாறு காப்பாற்றப்பட்டவரை, மருத்துவமனைக்குள் புகுந்து கொன்றுவிட்டு செல்கிறது அதே ரவுடிகூட்டம்.
இதைக் கண்டு பொங்குகிறார் டாக்டர். ‘‘அவர்கள் குருவின் (ஆதி) ஆட்கள்’’ என்றுகூறி, அவரை அடக்குகின்றனர் சக மருத்துவர்கள். எதிர்க்க முடியாத குருவுடன் சத்யா மோத,ரவுடிகள் அவரை சரமாரியாக தாக்கி தொங்கவிடுகின்றனர்.
சத்யா, போலீஸ் அதிகாரியாக திரும்பி வந்து, அந்த குருவை எப்படி வதம் செய்கிறார் என்பதும், மதுரையை அமைதிப் பூங்காவாக மாற்றுகிறார் என்பதும் படம். இடையில் காதல், சென்டிமென்ட் என தூவி யிருக்கின்றனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு லிங்குசாமி இயக்கியுள்ள படம். ஆக்ஷன் என்று ஆன பிறகு, அதில் லாஜிக் பார்ப்பதில் லாஜிக்கே இல்லைதான். ஹீரோ - ரவுடி மோதல் படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ, அனைத்தும் இதில் இருக்கிறது. வழக்கமாக ரவுடியை போலீஸ்தான் துவம்சம் செய்வார். இதில் ‘டாக்டர் போலீஸ்’ செய்கிறார்.
இந்த படம் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார் தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி. அதிரடியாக சண்டை போடுகிறார். அம்மாவிடம் அன்பு காட்டுகிறார், காதலியுடன் அழகாக நடனமாடுகிறார்.
குறிப்பாக, தெலுங்கு வாடை இல்லாமல் தமிழ் பேசுகிறார். ‘விசில் மகாலட்சுமி’யாக கவர்கிறார் கீர்த்தி ஷெட்டி. தனக்கு நடக்கும் சம்பவங்களை எஃப்.எம்.மில் சொல்வது, மருந்து குடித்துவிட்டதாக மருத்துவமனையில் சேர்வது என கலகலப் பூட்டுகிறார்.
ரவுடி ‘குரு’வாக ஆதி பினிசெட்டி. வில்லத்தன வேலைகளை கச்சிதமாக செய்தாலும், சில இடங்களில் நிமிர்ந்து பார்க்க வைக்கிறார். அவரது பார்வையும், தோற்றமும் அந்த கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்துகிறது. வீரத் தாயாக நதியா. ஆதி மிரட்டும் இடத்தில் அவர் பேசும் பதிலடி ரசிக்க வைக்கிறது.
தெனாவெட்டான காவல் ஆய்வாளராக பிரம்மாஜி, மருத்துவமனை டீன் ஜெயப்பிரகாஷ், ஆதியின் மனைவி அக்ஷரா கவுடா, மருத்துவர் பிருந்தா சாரதி என அனைவரும் கொடுத்த வேலையை செய்கின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையில் ‘விசில்’, ‘புல்லட்டு’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு, ஆக்ஷன் பிரம்மாண்டத்தை அதிரடியாக காட்டுகிறது.
வாகனங்களில் ஆந்திரா, தமிழக நம்பர் பிளேட்கள் மாறி மாறி வருவது, கர்னூல் கொண்டாரெட்டி கோட்டையை மதுரை என்று சொல்வது என படத்தில் கவனிக்கத் தவறிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ரவுடி - ஹீரோ இடையிலான ஈகோவை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். ஊகிக்கக்கூடிய பலவீனமான திரைக்கதை, படத்துக்கு பலம் சேர்க்கத் தவறினாலும் ஆக்ஷன் பிரியர்கள் அதிகம் ரசிப்பார்கள்.