

நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தனின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
தமிழில், 'மீண்டும் ஒரு காதல் கதை', 'ஜீவா', 'வெற்றிவிழா', 'மை டியர் மார்த்தாண்டன்', 'மகுடம்', 'ஆத்மா', 'சீவலப்பேரி பாண்டி', 'லக்கி மேன்' உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் பிரதாப் போத்தன். இதில், 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்திற்காக அவருகு தேசிய விருது வழங்கப்பட்டது. | வாசிக்க > சமரசமற்ற இயக்குநர்களின் முதல் சாய்ஸ் பிரதாப் போத்தன்
தவிர, 1980களில் தொடங்கி மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 69 வயதான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். இந்நிலையில், அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் ப்ரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை 'வெற்றிவிழா' காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கென் அஞ்சலி'' என பதிவிட்டுள்ளார்.
சத்யராஜ் வெளியிட்ட வீடியோவில், ''ஆரூயிர் நண்பன், மிக சிறந்த இயக்குநர், அற்புதமான நடிகர் பிரதாப் போத்தன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அவருடைய இயக்கத்தில் ஜீவா, மகுடம் ஆகிய இரு படங்களில் நடித்ததால் நல்ல பெயர் கிடைத்தது. குழந்தை போல மனசு, அவருடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது, எப்போதும் சிரிச்சுகிட்டே இருப்பார். ஆனால் திடீரென அவர் இறந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரதாப் போத்தனின் மறைவு நெஞ்சை பதறவைக்கிறது. மிகுந்த மன வேதனை அடைந்தேன். ஒரு நல்ல நண்பரை, ஒரு அற்புதமான மனிதரை, ஒரு சிறந்த தொழில்நுட்ப வல்லுநர், நடிகர் வேடிக்கையான மனிதரை இன்று காலை இழந்துவிட்டேன். அவருடன் சில படங்களில் பணியாற்றும் பாக்கியம் கிடைத்தது. நிச்சயம் உங்களை மிஸ் செய்வோம்'' என பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ், ''உங்கள் ஆளுமை என்றும் நிலைத்திருக்கும். உங்களை மிஸ் செய்வோம். ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
நிவின்பாலி, ''கடந்த வாரம் நாம் குட் பை சொல்லும்போது அதுதான் கடைசியாக இருக்கும் என நான் நினைத்துப்பார்க்கவில்லை. பிரதாப் சார், 'ரோஷன் சேட்டன்' படத்தில் உங்கள் மகனாக உங்களுடன் பணிபுரிந்தது ஒரு சிறந்த அனுபவமாகவும் கவுரவமாகவும் இருந்தது. உங்கள் அப்பாவி புன்னகை, மின்னும் கண்கள் மற்றும் அன்பான வார்த்தைகளுக்காக நான் எப்போதும் உன்னை நினைவில் கொள்வேன்'' என பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தகரா ‘என்கிற மலையாள காவிய படத்தில் நடிகராக திரையுலகத்தில் அறிமுகமாகி, நல்ல ஒரு இயக்குனராக பரிமளித்து, எளியவராய் எப்போதும் பெருத்த சிரிப்போடும் இயங்கிக் கொண்டிருந்த நண்பர் பிரதாப் போத்தன் அவர்கள், திடீரென்று இப்பூவுலகை விட்டுச் சென்றது பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது.
அவருடைய திரையுலக நண்பர்கள் வட்டம் தன் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் உணர்வார்கள். ஆறுதல் தேவைப்படுகிற நாமே அவரை இழந்து தவிக்கின்ற குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்ல வேண்டிய நிலை. நடிகர் சமூகத்தின் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் தன் மரியாதையையும், ஆறுதலையும் கலங்கிய கண்ணோடு தெரிவிக்கிறது.