

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம், ஊடகங்களில் பேசுபொருளாகிறது.
இயக்குநரின் தற்கொலைக்கு நந்துதான் காரணம் என நம்பும் அவருடைய மனைவியும் மகளும் அவரை வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறி காணாமல் போய் விடுகிறார்கள். ஃபைனான்சியர் நந்துவைக் கைது செய்ய போலீஸ் துரத்துகிறது.தனது கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கிளம்பும் நந்து, ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்து தற்போது பாழடைந்து, புதர்மண்டிக் கிடக்கும் தனக்கு மிகவும் பரிச்சயமான ஆசிரமத்துக்குள் போய் ஒளிந்துகொள்கிறார். அங்கிருந்து, ஊடகங்கள்அறிந்திராத, தன் வாழ்க்கைக் கதையை தனது திறன்பேசியில் ‘ஆடியோ’வாகப் பதிந்தபடி விவரிக்கத் தொடங்குகிறார்.
1971-ல் கதை தொடங்குகிறது... கணவனால் கொலையுண்டு ரத்தச் சகதியாகக் கிடக்கும் தன்னுடைய தாயின் சடலத்தில் பால் குடிக்க முயலும் ஆறு மாதக் குழந்தையாக நமக்கு அறிமுகமாகும் நந்துவின் 10 வயது, 18 வயது, 30 வயது, 40 வயதுபருவங்களின் ‘ரோலர் கோஸ்டர்’ வாழ்க்கையில், அவர் எப்படி ‘இரவின் பிரதி’யாக மாறிப்போனார், அவருடைய ‘நிழல்’ அவரை எதுவரை துரத்திக்கொண்டு வந்தது என்பதை கதை விவரிக்கிறது.
கதை நிகழும் காலம் சமகாலமாக இருந்து, கதைநிகழும் களமும் ஒரே இடமாக இருந்து, நிகழும் சம்பவங்களின் வரிசை ஒரே நேர்கோட்டில் சொல்லப்பட்டால், அதை ‘எளிய விவரிப்பு முறை’ என்கிறோம்.
அதுவே கதாபாத்திரங்கள் உலவும் நிலமும் காலமும்வெவ்வேறு காலகட்டமாகவும் இடங்களாகவும் இருந்து, அதில் சம்பவங்களின் வரிசையை முன்பின்னாகக் கலைத்துச் சொன்னால் அதை ‘நான் லீனியர்’ விவரிப்பு என்கிறோம்.
இந்த இரண்டில், எளிய விவரிப்பு முறை கொண்டகதைகளை உலகின் பல நாடுகளில் ஒரே ஷாட்டில்படமாக எடுத்திருக்கிறார்கள். ஆனால், ‘நான் - லீனியர்’ திரைக்கதை விவரிப்பைக் கொண்ட ‘இரவின் நிழல்’ ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதைக் காணும்போது, முதல் நொடியில் தொடங்கி, கதை முடியும் கடைசி நொடி வரை வியப்பூட்டக்கூடிய திரை அனுபவமாக திரையில் விரிகிறது.
முதலில் இப்படியொரு ‘சிங்கிள் ஷாட்’ படத்தை எடுக்க முடியும் என்று நம்பியதற்காகவே இயக்குநர் பார்த்திபனை உச்சி முகர்ந்து பாராட்டலாம்.
ஒரு திரைப்படத்தின் மிக முக்கியமான ‘காட்சி அனுபவம்’ என்பது, ‘ஷாட் பை ஷாட்’ உணர்வைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். இதை, கேமரா கோணங்களை மாற்றி அமைப்பதன் வழியாக, தனித்தனியாக எடுக்கப்பட்ட ஷாட்களை ‘எடிட்டிங்’ மூலம் வெட்டி - இணைப்பதன் வழியாக சாத்தியப்படுத்த முடியும். ஆனால், ஒரு திரைப்படத்தையே ‘சிங்கிள் ஷாட்’ எனும் முயற்சியில் செய்யும்போது, ‘ஷாட் பை ஷாட்’ மற்றும் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு பார்வையாளரை மடை மாற்றும் ‘சேஞ்ச் ஓவர்’ (change over) உத்தி ஆகியவற்றை கடை பிடிப்பது பெரும் சவால்! இந்த இரண்டையுமே தனது ‘விஷுவலைசேஷன்’ கற்பனை வழியாகச் சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.
ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் கொண்ட இந்த ‘சிங்கிள் ஷாட்’ திரைப்படத்தை படக்குழு எப்படி படமாக்கியது என்பதை விவரிக்கும் முதல் 30 நிமிட ‘மேக்கிங்’ காட்சிகள், கற்பனைக்கும் தொழில்நுட்பத் தேர்ச்சிக்கும் ஹாலிவுட்டுக்கு தமிழ் சினிமா சற்றும் குறைந்ததல்ல என்பதைக் காட்டுகின்றன.
ஒரே இடத்தில் 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட 50 வகையான, நகரும், நகராத அரங்குகளில் (Sets) உருவாக்கப்பட்ட கதைக் களம், பல இடங்களில் ‘செட்’ எனத் தெரிந்தாலுமே கூட, அதைப்பற்றியெல்லாம் அக்கறைகொள்ள நமக்கு அவகாசம் தராமல் நகர்கிறது திரைக்கதை. ஒரே ஷாட் எனும்போது அதில் எடிட்டிங் என்பது எழுத்திலேயே அதாவது திரைக்கதையிலேயே முடிவு செய்யப்பட வேண்டிய காட்டாயத்தை உணர்ந்து அதைக் கச்சிதமாகவும் வசனங்களை தனக்கேயுரிய நக்கலும் விமர்சனமுமும் கொண்டதாகவும் கொடுப்பதில் பார்த்திபன் மீண்டும் வெற்றிப்பெற்றிருக்கிறார்.
சென்னையிலிருந்து ஆந்திராவுக்கும், ஆந்திராவிலிருந்து சென்னைக்கும் சென்று திரும்பும் நந்துவும் அவருடைய வாழ்க்கையில் வந்து செல்லும் கதாபாத்திரங்களும் அவர்கள் எதிர்கொள்ளும் விளிம்பு வாழ்க்கையும் முதிய நந்துவின் விவரிப்பில் நம் முன் ரத்தமும் சதையுமாகத் தோன்றுகிறார்கள்.
நந்துவின் பல வயது பிரதிகள், அவர்களுடைய வாழ்க்கையில் வந்துசெல்லும் பெண்கள், துணைக்கதாபாத்திரங்கள், சிறார் நடிகர்கள் எனப் பெரும்பாலானவர்களை புதுமுகங்களாக அறிமுகப்படுத்தியிருப்பது கதையின் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிக்க உதவுகிறது. குறிப்பாக 30 வயது நந்துவாக வரும் அனந்த கிருஷ்ணன், லட்சுமியாக வரும் சினேகா குமார், சிலக்கம்மாவாக வரும் பிரிகடா சகா என புதுமுகக் கலைஞர்கள் மனம் ஈர்க்கிறார்கள்.
ஐம்பது வயது நந்து ஒளிந்திருக்கும் பாழடைந்த ஆசிரமத்தின் அரங்க அமைப்பின் தொடர்ச்சி, ‘சேஞ்ச் ஓவர்’களில் அவர் இடையிடையே வந்து கதை சொல்லும் உத்தி, அவர் முன்பாகவே கடந்த காலத்தின் நிகழ்வுகளும் கதாபாத்திரங்களும் ‘நியோ - நாய்ர்’ தன்மையுடன் விரிவது என இயக்குநர் பார்த்திபன் அசரடிக்கிறார். அதற்கு கைகொடுத்திருக்கிறது ஆர்.கே.விஜய்முருகனின் கலை இயக்கம்.
ஆர்தர் ஏ.வில்சனின் ஒளிப்பதிவில், ‘கிம்பள்’ சாதனத்தில் பொருத்தப்பட்ட கேமராவை உடலில் பொருத்திக்கொண்ட அந்த தொழில்நுட்பக் கலைஞர் (ஏ.கே.ஆகாஷ்), அவருக்கு காட்சிகள் சரியாகத் துலங்க ‘போகஸ் புல்லர்’ பணியைச் செய்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு (சங்கரன் டிசோசா, ராஜேஷ்) பாராட்டுக்கள்.
படத்தில் ‘ஷாட் பை ஷாட்’ தன்மையை இன்னும்மேம்படுத்திக் கொடுப்பதில் ரஹ்மானின் பின்னணி இசையும், கதையின் மையத்தையும் அதன் உணர்வுகளையும் துலங்கச் செய்வதில் அவர் தந்திருக்கும் பாடல்களும் படத்தை உயர்ந்த இடத்தில் வைக் கின்றன. வாழ்வின் பல கட்டங்களில் சிதிலங்களை மட்டுமே அதிகம் கடந்து வந்த முதன்மைக் கதாபாத்திரம், ‘மோனோலாக்’ ஆக தன் கதை கூறும் இத்திரைப்படத்தில் இருக்கும் குறைகளை ஆராய்வதைவிட, இப்படியொரு சாத்தியமற்ற முயற்சியை சாத்தியமாக்கி ஆச்சரியப்படுத்திக் காட்டியதற்காகவே இந்தப் படத்தைப் பார்த்து வியக்கலாம்.