

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் 'இது நம்ம ஆளு' மே 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைத்திருக்கும் இப்படத்தை டி.ராஜேந்தர் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. பலமுறை இப்படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தில் படமாக்கப்படாமல் இருந்த ஒரு பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கினர். அனைத்துப் பணிகளும் முடிவுற்றதைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இன்று படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி "சத்தியமா மே 20ம் தேதி வர்றோம்" என்று வீடியோ பதிவின் மூலமாக படக்குழு அறிவித்திருக்கிறது.