மீண்டும் ஜெய், சத்யராஜ் கூட்டணி - நயன்தாராவின் 75-வது பட அறிவிப்பு வெளியானது

மீண்டும் ஜெய், சத்யராஜ் கூட்டணி - நயன்தாராவின் 75-வது பட அறிவிப்பு வெளியானது
Updated on
1 min read

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார். திருமணம் முடித்தாலும் தொடர்ந்து, சினிமாவில் நடிப்பதிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். ஏறக்குறைய 2 தசாப்தங்களாக திரைத்துறையில் கோலோச்சும் நயன்தாராவின் 75-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தயரிப்பாளர் ரவீந்திரனின் டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்போதைக்கு “லேடி சூப்பர் ஸ்டார் 75” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளார். இவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்தப் படம் இன்று காலை சென்னையில் ஒரு எளிய பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் தந்தையாக சத்யராஜ், காதலனாக ஜெய் நடித்திருந்தனர். இவர்கள் கூட்டணி மீண்டும் இந்தப் படம் மூலமாக இணைந்துள்ளது. அவர்களுடன், ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

படத்தின் பூஜை தொடர்பான படங்கள் வெளியாகவில்லை என்றாலும் டைட்டில் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக, இந்தப் படத்தின் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா பேசும்போது, “நாயகியை மையமாக வைத்து நகரும் இந்தக் கதையில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது. இது அவரது 75-வது படம் என்பதால், அவர் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதில் நான் மிகுந்த கவனத்துடன் உள்ளேன். திரைப்பட உருவாக்கத்தை கற்று தந்த எனது குரு, என் ஆன்மா இயக்குநர் ஷங்கருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in