

பன்னி குட்டிதிருமணமான தங்கையால் பிரச்சினை, அதனால், மதுவே கதியென்று இருக்கும் அப்பா, நிறைவேறாத காதல் என‘பேச்சிலர்’ உத்திராபதிக்கு (கருணாகரன்) தலைகொள்ளாத சிக்கல்கள். இது போதா தென்று, பைக்கில் செல்லும்போது ஒரு பன்றிக் குட்டியை மோதிவிட, அதனால், புதிய பிரச்சினை வந்து சேர்கிறது.
அதை சரிசெய்ய, அந்த பன்றிக் குட்டியை தேடி அலைகிறார் உத்திராபதி. அது திட்டாணியிடம் (யோகிபாபு) இருப்பதை அறியும் அவர், நண்பர்கள் உதவியுடன் அதை களவாட முயற்சிக்கிறார். திட்டாணியோ, அதை வராக அவதாரமாக நினைத்து, கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறார். நிறைவாக, உத்திராபதியின் பிரச்சினை தீர்ந்ததா, இல்லையா என்பது கதை.
மூடநம்பிக்கைகள், கிராமத்து மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் களேபரங்களை, ஒரு பன்றிக் குட்டியை மையமாக வைத்து நகைச்சுவை டிராமாவாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர் அனுசரண். நிஜமாகவே முழு நீள நகைச்சுவையாக இருக்கிறது படம். எந்த நகைச்சுவை காட்சியும் துணுக்கு தோரணமாக இல்லாமல், கதைக் களத்துக்குள் முகிழ்த்து வெடிக்கும் எதார்த்த நகைச்சுவையாக இருப்பது பலம்.
‘கோடாங்கி’ சொன்ன பரிகாரத்தை செய்வதற்காக, தொலைந்துபோன பன்றிக் குட்டியை உத்திராபதியும், நண்பர்களும் தேடி அலையும் படலம் சற்று அயர்ச்சி தந்தாலும், ரசிக்க வைக்கிறது. கருணாகரன் தான் ஒரு ‘ஹீரோ மெட்டீரியல்’ என்பதை மெல்ல மெல்ல காட்டிக்கொண்டு வருகிறார்.
இதில் கதையின் நாயகனாக அவர்படும் பாடுகள் எதார்த்தம். கதையின் முக்கிய பிரச்சினையை அவர் எதிர்கொள்ளும் விதமும்,குடும்பத்தினர், காதலியுடன் அவரது அணுகு முறையும் அளவான, அலட்டல் இல்லாத நடிப்பால் அட்டகாசமாக எடுபடுகின்றன.
யோகிபாபு காமெடியனாக தெரியாமல், கேரக்டராக தெரிவது பெரிய ஆச்சர்யம். திருமண சீதனமாக வரும் பன்றிக் குட்டியை பாதுகாக்க அவர் செய்யும் பிரயத்தனங்கள் சிரிக்க வைக்கின்றன. படத்தின் காமெடியன் என்கிற இடத்தை விஜய் டிவி புகழ் ராமரும், சிங்கம்புலியும் முழுமையாக நிறைவு செய்கின்றனர்.
‘புருனே’ கதாபாத்திரத்தில் ‘ஃபாரின் ரிட்டர்ன்’ பேச்சிலராக வரும் ராமரின் நகைச்சுவை வெடிகளும், உடல் மொழியும் அட்டகாசம். ‘கோடாங்கி’ சொல்லும் அனைத்தும் எதார்த்தத்தில் நடப்பதை அறிந்து ராமர் கதறும் கதறல், திரையரங்கில் பெரும் சிரிப்பு சூறாவளியை உருவாக்குகிறது.
ஊருக்கு வெளியே இருக்கும் கோயிலில் பூசாரியாக இருக்கும் சிங்கம்புலி, ஓட்டலில் குடும்பத்துடன் ஓசியில் வெளுத்துக்கட்டுவது, நண்பர்களுக்காக கோயிலுக்கு விடுமுறை விடுவது என கலகலக்க வைக்கிறார். கோடாங்கியாக சில காட்சிகளே வந்தாலும் திண்டுக்கல் லியோனியை பயன்படுத்திய விதம் நச்! அவர் அருள்வாக்கு சாமியார் கதாபாத்திரத்தை நவீனம் கலந்து வெளிப்படுத்தும் விதமும் நகைச்சுவையில் அள்ளுகிறது.
பன்றி தொடர்பான மூடநம்பிக்கையை கிண்டலடிக்கும் அதேநேரம், பன்றிக் காய்ச்சலை வைத்து செய்தி சொன்ன விதத்துக்காகவும், இடைவிடாமல் சிரிக்க வைத்ததற்காகவும் இந்த ‘பன்னி குட்டி’யை வரவேற்கலாம்.