

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர், 'கமல் சார் உங்கள் நடிப்பு குறித்து கருத்து சொல்ல எனக்குத் தகுதியில்லை. உங்கள் ரசினாக இந்த தருணத்தை பெருமையாக உணர்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி,சூர்யா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் 'விக்ரம்'. கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் 400 கோடி வசூலை எட்டியது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ஜூலை 8-ம் தேதி டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தை பார்த்து தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''விக்ரம்..ப்ளாக் பஸ்டர் சினிமா! புதிய கல்ட் க்ளாசிக்!! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உங்களுடன் இணைந்து விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த செயல்முறை குறித்து விவாதிக்க விரும்புகிறேன். சிறப்பான படைப்பு. விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் நடிப்பு திரையில் ஒளிர்கிறது.
இதைவிட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியாது. அனிருத் என்ன மாதிரியான ஒரு இசை... உங்களுடைய பெஸ்ட் இது. இது நீண்ட காலத்திற்கு எனது பிளேலிஸ்ட்டில் முதலிடம் வகிக்கப் போகிறது...
இறுதியாக லெஜண்ட் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பு குறித்து கருத்து சொல்ல எனக்கு போதுமான தகுதியில்லை. நான் சொல்லக்கூடி வேண்டியது ஒன்றே ஒன்று தான்.. உங்களின் மிகப்பெரிய ரசிகனான எனக்கு, இது பெருமையான தருணங்களில் ஒன்று! வாழ்த்துகள் சார் உங்களுக்கும் உங்கள் அருமையான குழுவிற்கும்!'' என்று பதிவிட்டுள்ளார்.