Last Updated : 01 Jul, 2022 02:19 PM

Published : 01 Jul 2022 02:19 PM
Last Updated : 01 Jul 2022 02:19 PM

முதல் பார்வை | யானை - மாறாத ஹரி உலகின் ‘சொந்த’ ரீ-கிரியேஷன்!

குடும்பத்துக்காக கஷ்டங்களை தூக்கி சுமப்பவன், அதே குடும்பத்திற்கு எதாவது பிரச்சினை என்றால் தூக்கிப்போட்டு மிதிக்கவும் தயங்க மாட்டான் என படத்தில் வரும் வசனமே ‘யானை’யின் ஒன்லைன்.

ராமநாதபுரத்தில் பிஆர்வி - சமுத்திரம் என்ற இரண்டு குழுக்களுக்கிடையே பகைமை முட்டிக்கொள்கிறது. அருண் விஜய்யின் பிஆர்வி குழுமத்தை பழிவாங்கத் துடிக்கிறது எதிர் தரப்பு. இது ஒரு புறமிருக்க, அருண்விஜய் குடும்பத்தில் நடக்கும் ஒரு நிகழ்வு அந்தக் குடும்பத்தை இரண்டாக்கிவிடுகிறது. அதற்கான பழிவும் அருண் விஜய் மீது விழ, அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார்? அது என்ன சம்பவம், இறுதியில் பிரிந்த உள்ளங்கள் இணைந்தனவா? - இந்தக் கேள்விகளை எல்லாம் உருவாக்கி, 'யானை' படத்தின் திரைக்கதை மூலம் பதிலும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஹரி.

சண்டைக்காட்சிகளில் மதம் பிடித்த யானை போல பிளிறும் அருண் விஜய், சென்டிமென்ட் காட்சிகளில் கோயில் யானை போல சாந்தமாகி உருகுகிறார். முறுக்கு மீசை, கட்டுறுதி உடம்பு, எந்நேரமும் தம்புள்ஸை கையில் வைத்திருப்பது போன்ற தோரணை என விரைப்பாக வலம் வரும் அருண் விஜய் தேர்ந்த நடிப்பால் கவனம் பெறுகிறார். காதலிக்கவும், பாட்டுக்காகவும், அறைவாங்கவும், அழவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார் பிரியா பவானி சங்கர். பாகவதர் காலத்து நாயகிகளின் டெம்ப்ளேட்டுகள் பிரியா பவானி சங்கரையும் விடவில்லை.

ராதிகா தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் நடிப்பில் எல்லையை தொடுகிறார். அம்மு அபிராமியின் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. தவிர சமுத்திரகனி, போஸ் வெங்கட், சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, யோகிபாபு என பட்டாளமே நடித்திருக்கிறது. கேஜிஎஃப் படத்தில் கருடன் எனும் மாஸ் டான் ஆக இருந்தவரை ‘யானை’ படத்தில் அருண் விஜய்யை கண்டு பயப்படும் வில்லனாக அழுத்தமில்லாத எழுத்தால் வீணடித்துவிட்டார்கள். இருப்பினும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பின் மூலம் நிறைவைத் தருகிறார்.

இயக்குநர் ஹரி தன்னுடைய முந்தைய படங்களை தானே ரீமேக் செய்ததைப்போல ஒரு கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறார். ‘யானை’ படத்தில் தாமிரபரணி, வேல், பூஜை, கொஞ்சம் வேங்கை படங்களின் சாயல் அப்படியே பிரதிபலிக்கிறது. கரோனா வந்தது, லாக்டவுனைப் பார்த்தோம், முகக்கவசம் அணிந்தோம்... இப்படி உலகம் பல மாற்றங்களுக்குள் தன்னை தகவமைத்துக்கொள்ளும் சூழலில் ஹரி மட்டும் இன்னும் மாறவேயில்லை. தன் படைப்புகளை தானே கலந்து கட்டி ரீ-கிரியேட் செய்ய முனைந்திருக்கிறார்.

அண்ணன், அண்ணி, பெரியப்பா, சித்தப்பா சூழ்ந்த ஒரு குடும்பம், அந்தக் குடும்பத்தை அழிக்க நினைக்கும் எதிராளி, நிற்காமல் ஓடும் கார்கள், எத்தனை பேர் வந்தாலும் தூக்கி பந்தாடும் நாயகன், அருவாள், நீண்ட வசனம், கொஞ்சம் சென்டிமென்ட், பேச்சுக்கு இடையிடையே 'ஏலே' என ஒரே மாதிரியான ஹரியின் டெம்ப்ளேட் சலிப்பைத் தட்டுகிறது.

படத்தின் முதல் பாதியை விறுவிறுப்பாக கொண்டு சென்றாலும், ஏற்கெனவே பல முறை பார்த்த காட்சிகள் என்பதாலும், யூகிக்க முடிந்த திரைக்கதை என்பதாலும் பெரிய அளவில் சுவாரஸ்யம் தடுப்படவில்லை. இரண்டாம் பாதி சென்டிமென்ட் காட்சிகள் அவரது கடந்த படங்களில் ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டிலும் இந்தப் படத்தில் உணர்வு ரீதியாக பார்வையாளர்களை கட்டிப்போட தவறிவிட்டது.

குறிப்பாக, காமெடி காட்சிகளிலாவது பார்வையாளர் மீது கொஞ்சம் பரிதாபப்பட்டிருக்கலாம். காமெடி என கூறப்படும் அந்தக் காட்சிகளால் எந்தப் பயனுமில்லை. குறிப்பாக 'காட்டு கரடி', 'கரி மூட்டை' போன்ற உருவ, நிற கேலி வசனங்களிலிருந்து எப்போது தான் தமிழ் சினிமா விடுபட போகிறதோ?. முஸ்லிம், கிறிஸ்துவ மதங்களை கையிலெடுத்து, அதற்கான உரிய நியாயத்தை சேர்க்கத் தவறியிருக்கிறார்கள்.

பெண்கள் குறித்து பக்கம் பக்கமா வசனம் பேசும் அருண் விஜய், பிரியா பவானி சங்கரை கன்னத்தில் அறைவதும், அதற்கு பிறகும் கூட அந்தப் பெண் 'நான் உன்னை தான் லவ் பண்றேன்' என சொல்வதும் நகை முரண்.

தவிர, கோபிநாத்தின் கேமிராவில் சிங்கிள் ஷாட்ஸ், ஓவர் தி டாப் ஆங்கிள் ஷாட்ஸ், ட்ரோன் ஷாட்ஸ்கள் ஈர்க்கின்றன. கட்டேயில்லாமல் நகரும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் கோபிநாத் மற்றும் நடிகர் அருண் விஜய்யின் உழைப்பை காண முடிகிறது. சண்டைக்காட்சிகள் படத்தின் கதைகளத்திற்கு நியாயம் சேர்க்கின்றன. ஆண்டனியின் எடிட்டிங் கச்சிதம். ஜிவி பிரகாஷ் இசையில் 'தெய்வமகளே' பாடல் நினைவில் நிற்கிறது.

மொத்ததில், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை விரும்புபவர்கள் இந்த ‘யானை’ மீது ஏறி சவாரி செய்யலாம். தவிர மசாலா கதையில் வித்தியாசத்தை எதிர்பார்த்து இந்த ‘யானை’ மேல் சவாரி செய்ய நினைப்பவர்களை கீழே தள்ளி, அவர்கள் மீது ‘யானை’ சவாரி செய்ய வாய்ப்பிருக்கிறது.

வீடியோ வடிவில் விமர்சனத்தைக் காண :

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x