திரை விமர்சனம்: பட்டாம்பூச்சி

திரை விமர்சனம்: பட்டாம்பூச்சி
Updated on
2 min read

பால்யத்தில் தனது தந்தையால் குடும்பவன்முறைக்கு ஆளாகும் சுதாகர்(ஜெய்), வளர்ந்து ஓவியன் ஆகிறார்.தந்தையின் தொடர் துன்புறுத்தல் காரணமாக உடல் மற்றும் மனச் சிக்கலுடன் வாழ்கிறார். எதிர்பாராதவிதமாக செய்யாத கொலைக்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

ஆனால், ஒருசைக்கோவாக மாறி அவர் செய்த 7 கொடூரகொலைகள் பற்றி காவல் துறைக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. சுதாகரே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொள்கிறார். கொலைகளுக்கான சாட்சியங்கள் கிடைத்தால் மட்டுமே அவரை குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என்கிற நிலையில், அவற்றை கண்டுபிடிக்க களமிறங்கும் காவல் அதிகாரிக்கும் (சுந்தர்.சி) சைக்கோ கில்லரான சுதாகருக்கும் இடையே நடக்கும் ரத்த விளையாட்டுதான் கதை.

கொலையாளி யார் என்பதை எடுத்த எடுப்பிலேயே கூலாக அறிமுகப்படுத்திவிட்டு கதை சொல்லத் தொடங்குகிறார் இயக்குநர். அதனால், ‘திருவாளர் கொலையாளி எப்படி கொலை செய்தால் எங்களுக்கு என்ன?’ என்பதுபோலதிரையரங்குகளில் பாவமாக உட்கார்ந்திருக்கின்றனர் பார்வையாளர்கள்.

சுதாகர் எதற்காக கொலை செய்கிறார் என்ற காரணத்தை உருவாக்குவதில் காட்டிய அக்கறையை, தன்னை விசாரிக்க வரும் அதிகாரி மீது சுதாகரின் கோபம் ஏன் திரும்புகிறது என்பதை சித்தரிப்பதிலும் காட்டியிருந்தால் இருவருக்கும் இடையிலான ‘மைண்ட் கேம்’ எடுபட்டிருக்கும்.

மரண தண்டனை கைதியை வெளியேஅழைத்து வருவது, காவலர் இமான் அண்ணாச்சி கொல்லப்படுவது, நாயகனின் தந்தையையும், தோழியையும் கடத்தி துன்புறுத்துவது உள்ளிட்ட பெரும்பகுதி காட்சிகள் பார்த்து சலித்த ‘டெம்பிளேட்’ ட்ரீட்மென்ட். அதேநேரம் பத்திரிகையாளராக வரும் ஹனி ரோஸ் - சுந்தர்.சி - அவரது அப்பா இடையிலான காட்சிகளில் இழையோடும் குடும்ப, காதல், பாச உணர்வுகள் நன்கு எடுபடுகின்றன.

காவல் அதிகாரியாக சுந்தர்.சி. அடக்கமாகவும் சில ஆக்‌ஷன்காட்சிகளில் ஹீரோயிசம் காட்டியும்நடிக்கிறார். சுதாகராக நடிக்கும் ஜெய், தனக்கு கிடைத்த புதிய களத்தில் முடிந்த வரை ஸ்கோர் செய்கிறார்.

சிசிடிவி உள்ளிட்ட தொழில்நுட்பம் அறிமுகம் ஆகாத 80-களில் கதை நடப்பதுபோல காட்டுகின்றனர். இந்த பீரியட் தன்மையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட சில ஐடியாக்கள் புதுமையாக இருந்தாலும், அவை போதிய அளவு இல்லாததால் பழைய படம் பார்ப்பதுபோன்ற உணர்வே மிஞ்சுகிறது.

காலகட்டத்தை பிரதிபலிக்கும் கலை இயக்கம், ஒளிப்பதிவு, த்ரில்லருக்கான இசை, புதிய கதைக்களம் என எல்லாம்இருந்தும், காலத்தால் பின்தங்கிய திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளால் சிறகடிக்க தட்டுத் தடுமாறி நிற்கிறது இந்த ‘பட்டாம்பூச்சி’.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in