

வெங்கட்பிரபுவின் புதிய படத்தில் இளையராஜா - யுவன்சங்கர்ராஜா இணைந்து இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'மாநாடு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான படம் 'மன்மத லீலை'. கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து வெங்கட்பிரபு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அண்மையில் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிக்கிறார்.
வெங்கட் பிரபுவுக்கு இது முதல் பை லிங்குவல் படம் என்பதும், நாக சைதன்யா நடிக்கும் முதல் தமிழ் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரமாண்டமாக உருவாக உள்ளது. வெங்கட்பிரபு, நாக சைதன்யா பரஸ்பரம் தமிழ், தெலுங்கில் மொழிகளில் அறிமுகமாக உள்ள நிலையில், படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்தப்படத்தின் நாயகி யார் என்பது குறித்து தகவல்கள் வெளிவராமல் இருந்தன. அந்தவகையில் படத்தின் நாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இது தவிர அவர், லிங்குசாமி இயக்கி வரும் தி வாரியர் பாலா சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். அதேபோல இப்படத்திற்கு இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.