Last Updated : 22 Jun, 2022 09:56 AM

 

Published : 22 Jun 2022 09:56 AM
Last Updated : 22 Jun 2022 09:56 AM

‘மாஸ்’ மட்டும் அல்ல... விஜய்யிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? | விஜய் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

30 ஆண்டுகள் இருக்கும். 'நாளையத் தீர்ப்பு' படம் வெளியான சமயம் அது. அந்தப் படத்தைப் பார்த்து, 'இதெல்லாம் ஒரு முஞ்சியா? யார் ரசிப்பார்கள் இதை' என திட்டி எழுதியது பத்திரிகை ஒன்று. 20 வயதான அந்தப் பையனுக்கு அதை எப்படி எடுத்துக்கொள்வதென தெரியவில்லை. தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான். காரணம், தன் அப்பா - அம்மா பேச்சையெல்லாம் மீறி சினிமாவிற்குள் நுழைந்த சிறுவன் அவன். தன் பெற்றோரிடம் முதன்முதலாக தன் சினிமா ஆசையை சொல்லும்போது கூட, 'சினிமா பாதை மிகவும் கடினமானது. நீ எங்களின் செல்லப்பிள்ளை. நடிப்பு வேண்டாம்' என தடுத்தார்கள். மீறி நுழைந்தவன் தொடக்கத்தில் பல அவமானங்களை சந்திக்கவேண்டியிருந்தது. தன்னை நிரூபிக்க வேண்டிய இடத்திற்கு தள்ளப்பட்டான்.

உழைத்தான், உழைத்தான், உழைத்துக் கொண்டேயிருக்கிறான். எந்த விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் ஓடுகின்றன அவனது கால்கள். இளைப்பாறலில்லாத அவனது ஓட்டம்தான் தமிழ் சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுகொடுத்துள்ளது. தி நேம் இஸ் விஜய்!

விஜய்யின் ஃபிலிமோகிராஃபியை எடுத்துப் பார்த்தால் அவரது ஆரம்ப கால படங்கள் அனைத்தும் காதல், காமெடி கதைக்களங்களை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டிருக்கும். 'செந்தூரப்பாண்டி', 'ரசிகன்', 'ராஜாவின் பார்வையிலே', 'சந்திரலேகா' 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை' என வரிசைக்கட்டிக்கொண்டே போகலாம். அந்த சமயத்தில்தான், முழுக்க முழுக்க ஒரு காதல் கதை கொண்ட படமாக அவருக்கு வந்து சேர்ந்தது 'பூவே உனக்காக'. ஒருதலை காதலர்களுக்கு அது அருமருந்து.

விஜய் கரியரிலேயே அவருக்கு பாராட்டையும், புகழையும் ஈட்டிகொடுத்து பேமிலி ஆடியன்ஸ்களை அவரை நோக்கி ஈர்த்த படம் 'பூவே உனக்காக'. இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் அந்தப் படத்தை ஆர்வத்துடன் பார்க்கும் கூட்டம் இல்லாமல் இல்லை. மிகச் சிலருக்கு மட்டுமே இப்படி அமையும். 'மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது' என ஃபங்க் வைத்துக்கொண்டு, க்ளின்ஷேவில் மேல் பட்டன் போடாமல் விஜய் பாடும் அந்தப் பாடலுக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு.

அடுத்தடுத்து, 'காலமெல்லாம் காத்திருப்பேன்', 'லவ் டுடே', 'நினைத்தேன் வந்தாய்' போன்ற காதல் படங்களால் தன் கரியரை கட்டமைத்தார். அஜித்துக்கு ஒரு 'காதல் கோட்டை'யைப் போல விஜய்க்கு ஒரு 'காதலுக்கு மரியாதை'. அதேபோல 'துள்ளாத மனமும் துள்ளும்', 'என்னென்றும் காதல்' என ஒரே காதல் படமாக இறக்கித் தள்ளினார். இதில் பெரும்பாலான படங்கள் விஜய்க்கு கைகொடுத்து பேமிலி, யூத் ஆடியன்ஸ்கள் அவரை நோக்கி திரண்டனர். நடுநடுவே, 'ஒன்ஸ்மோர்', 'மின்சாரக்கண்ணா' போன்ற காமெடியாலும் வெகுஜன மக்களை ஈர்த்தார்.

2000-ம் ஆண்டுகளுக்கு பிறகும் கூட, 'குஷி', 'பிரியமானவளே' படங்களை கொடுத்தவர், 'பிரண்ட்ஸ்', 'ஷாஜஹான்' மூலம் மிகப்பெரிய இளைஞர் பட்டாளத்தை தனதாக்கிக்கொண்டார். 2003-க்கு பிறகு 'திருமலைக்கு' முன், பின் விஜயின் கரியரை இரண்டாக பிரிக்கும் அளவுக்கு மாஸ் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். திருமலையில் தொடங்கிய பயணம் 'பீஸ்ட்'வரை நீண்டுகொண்டேயிருக்கிறது.

காதல் படங்களிலிருந்து மாஸ் படங்களுக்கு விஜய் மாறியபோது, இளையர்கள் கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டது. இடையில் ஃபேமிலி ஆடியன்ஸை விட்டுவிடக்கூடாது எனக் கருதியவர், 'திருப்பாச்சி', 'சிவகாசி'யை கொடுத்தார். 'போக்கிரி'க்கு பிறகு விஜய்க்கு பெரிய சிக்கல். 'குருவி', 'வில்லு', 'வேட்டைக்காரன்', 'சுறா' என கன்டன்டே இல்லாத வெறும் மாஸை முதலீடாக கொண்ட படங்களில் நடித்தது ரசிகர்களிடையே எடுபடவில்லை.

இங்கே பிரச்சினை விஜய் எந்த இடத்திலும் தன்னை மாற்றிக்கொள்ளாதது. 'திருமலை' படத்திற்கு பிறகு அவரின் படங்களிலும், அவரது கெட்டப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. ஒரே மாதிரியான படங்களைத்தான் தேர்வு செய்தார். அதற்கு முற்றுப்புள்ளி போட்டது 'நண்பன்'. அந்தப் படத்தில் எந்த மாஸும் இல்லாமல், கன்டென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பார் விஜய். 'கத்தி' கூட அவரது மாஸ் கரியரிலிருந்து சற்று விலகியே நின்றது. 'பிகில்' ஸ்போர்ட்ஸ் ட்ராமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விஜய்க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தது. இங்கே இதுதான் பிரச்சினை.

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டித்தரும் நாயகனாக விஜய்யை முன்னிறுத்துவது தான் சிக்கல். இதனால் விஜயே கூட, மாஸ் வகையறாவில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு நடிக்க தயாராக இல்லை. சவாலான, வித்தியாசமான கதாபாத்திரங்களை விஜய் தேர்வு செய்ய தயங்குவதற்கான காரணமும் கூட இதுதான்.

இந்த மாஸ் ஓவர்டோஸாகும்போது தான் 'பீஸ்ட்' படத்தின் ஜெட் ஓட்டும் காட்சிகள் நிகழ்கின்றன. அதற்காக விஜய் மாஸ் படங்களை தவிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. மாறாக, கன்டென்ட் + மாஸ் என கொஞ்சம் உருப்படியான படங்களை தேர்வு செய்து அவர் நடிக்கவேண்டிய தேவை இருக்கிறது.

கமர்ஷியல் படங்களிலும் கூட மாஸான காட்சிகளை உருவாக்கிவிட்டு, அதில் கதையை பொருத்துவதற்கு பதிலாக, கதைக்கு தேவையான இடங்களில் மாஸ் காட்சிகளை பொருத்துவதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கூட, தான் இழந்த ஃபேமிலி ஆடியன்ஸை திரும்பப் பெறும் விஜய்யின் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

முழுக்க முழுக்க வணிக சினிமாவுடன், அவ்வப்போது சில கன்டென்ட் சினிமாக்களுக்கும் விஜய் முக்கியத்துவம் தந்து, தரமான சினிமாக்களை தமிழ் திரையுலகத்துக்கு வழங்க வேண்டும் என்பது தமிழ் சினிமா பற்றாளர்களின் பார்வையாக இருக்கிறது. சரி, அதுவும் வேண்டாம்; இதுவும் வேண்டாம்... விஜய்யின் தனித்தன்மையே சிறுவர் முதல் வயோதிகர் வரை அனைத்து தரப்பினரையும் என்டர்டெயின் செய்யும் வல்லமைதான். அவர் காலச் சூழலுக்கு ஏற்ப தரமான பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தந்தாலே போதுமானது. அதற்கு, உச்ச நட்சத்திரமான விஜய், திறமையான இயக்குநர்களிடம் தன்னை ஒரு நடிகராக மட்டும் ‘முழுமையாக’ ஒப்படைக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x