

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’ருத்ரன்’ பட கிளைமாக்ஸ் காட்சிக்காக, ரூ.1 கோடியில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது.
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகிர்தண்டா’ உட்பட பல படங்களை தயாரித்தவர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ’ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த வாரம் தொடங்குகிறது. இங்கு ராகவா லாரன்ஸ், சரத்குமார் மோதும் சண்டைக் காட்சி 10 நாட்கள் படமாக்கப்படுகிறது. சண்டைக் காட்சியை ஸ்டன் சிவா அமைக்கிறார். இதற்காக ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முதல் தோற்ற (ஃபர்ஸ்ட் லுக்) போஸ்டர் இன்று வெளியாகிறது.