'சொந்தமாக எனக்கென்று ஒரு வீடுகூட கிடையாது' - நடிகர் மாதவன்

'சொந்தமாக எனக்கென்று ஒரு வீடுகூட கிடையாது' - நடிகர் மாதவன்
Updated on
1 min read

இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு'. இந்தப் படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்கிய நிலையில், படத்திலிருந்து அவர் விலகினார். பின்னர், இந்தப் படத்தை நடிகர் மாதவனே இயக்கினார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக, 1994-ல் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் நம்பி நாராயணன் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தும் கதையாக உருவாகியுள்ள படம், 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' என பெயரிடப்பட்டது. தமிழில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், ஜூலை 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து பட புரமோஷன் நிகழ்வுகளில் மாதவன் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நடிகர், இயக்குநர் என்பதை தாண்டி தயாரிப்பாளராக இந்தப் படத்தில் மாறியிருப்பதன் கஷ்டத்தை வெளிப்படுத்தினார் மாதவன்.

அந்தப் பேட்டியில், "என்னுடைய கடைசி படங்கள் விக்ரம் வேதாவாக இருக்கட்டும், அல்லது இறுதிச்சுற்றாக இருக்கட்டும் அனைத்தும் கமர்ஷியல் திரைப்படங்கள். எனக்கு பணம் வேண்டும் என்றால், அதேபோன்ற கமர்ஷியல் படங்களை என்னால் செய்ய முடியும். ஆனால் பணத்துக்காக 'ராக்கெட்ரி' படத்தை எடுக்கவில்லை. நம்பி நாராயணன் என்ற மனிதரின் சாதனைகளையும் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சொல்ல வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை தயாரித்தேன்.

எனக்கு சொந்தமாக ஒரு வீடு கிடையாது. இந்தியாவிலோ, துபாய்யிலோ நான் வாடகை வீட்டில் தான் தங்கியிருக்கிறேன். இந்தமுறை இந்தப் படத்துக்கு பிறகு ஒரு வீடு வாங்க வேண்டும் என எனது மனைவி என்னிடம் உறுதி வாங்கியுள்ளாள். ஏனென்றால், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு முறை நாங்கள் வீடு மாற வேண்டியுள்ளது. எனவே, எனக்கு பணம் ஒரு விஷயம் கிடையாது. பணம் இன்றைக்கு வரும் நாளைக்கு போகும். இந்தக் கதையை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம்". இவ்வாறு நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in