திரை விமர்சனம்: வீட்ல விசேஷம்

திரை விமர்சனம்: வீட்ல விசேஷம்
Updated on
2 min read

ரயில்வேயில் பணிபுரியும் உன்னி கிருஷ்ணனும் (சத்யராஜ்) ‘ஹோம் மேக்கர்’ வேணியும் (ஊர்வசி) மனமொன்றிய தம்பதி. இவர்களது மூத்த மகன் இளங்கோ (ஆர்ஜே பாலாஜி) தனியார் பள்ளியில் ஆசிரியர். இளையமகன் அனிருத் (விஸ்வேஷ்) பள்ளி இறுதி வகுப்பு மாணவன்.

இவர்களுடன் உன்னியின் அம்மாவும் (கேபிஏசி லலிதா) வசிக்கிறார். மகிழ்ச்சிக்கு குறைவில்லாத இந்த நடுத்தரக் குடும்பத்தை, ‘வேணி கர்ப்பமாகியிருக்கிறார்’ என்கிற செய்திதாக்குகிறது. மகன்கள், அம்மாவிடம் இதை எப்படி சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறார் உன்னி.

விஷயம் தெரிந்த பிறகுமகன்களும், அம்மாவும் இதை எப்படி எடுத்துக்கொண்டனர்? சுற்றமும், நட்பும் இந்த முதிய தம்பதியை எப்படி அணுகினர் என்பது கதை.

கடந்த 2018-ல் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘பதாய் ஹோ’ என்ற இந்தி படத்தின் மறு ஆக்கம்தான் இப்படம். நடுத்தர வயதைகடந்துவிட்ட தம்பதியர், குழந்தை பெற்றுக்கொள்வதை ஏளனமாக பார்க்கும் சமூக மனநிலையை மறைமுகமாக, பிரச்சாரமின்றி சாடியது ‘பதாய் ஹோ’. மறு ஆக்கத்தில், அதில் இருந்து இம்மியும் விலகாமல் இன்னும் ஆழமாக சென்று ஜமாய்த்துள்ளனர் படத்தை இணைந்து இயக்கியுள்ள ஆர்ஜே பாலாஜியும் என்.ஜே.சரவணனும்.

மனமும், உடலும் தகுதியுடன் இருந்தால், எந்த வயதிலும் மகப்பேறு இயல்பானது என்பதை நிறுவிய விதம் அபாரம்.

எந்த இடத்திலும் தொய்வு இல்லாத திரைக்கதையில், தமிழ் சூழல், ரசனைக்கு ஏற்ப செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், மூலப் படத்தைவிட தமிழ் மறு ஆக்கத்தை மேம்பட்டதாக ஆக்குகின்றன.

படத்தில், தாய்மையின் மகத்துவம் மதிப்புடன் பதிவு செய்யப்படுகிறது. தாய்மை என்பதை குடும்பங்களும், சமூகமும் அளவுக்கு அதிகமாக புனிதப்படுத்தி வைத்திருப்பது, அம்மாக்கள் மீதான கூடுதல் சுமையாக இருப்பதை படம் சுட்டிக்காட்டுகிறது.

அதேபோல, கணவன் - மனைவி உறவானது,ஈகோவை உதறிய ஒன்றாக, பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, களங்கமற்ற அன்பின் மீது கட்டப்பட்டதாக இருக்கும் என்பதை, வேணி - உன்னி தம்பதி மூலம், எந்த தரப்பையும் குற்றவாளி ஆக்காமல் உணர்த்துவது நேர்மையான அணுகுமுறை.

அனைத்து கதாபாத்திரங்களும் மனதை தொடுகின்றன. குறிப்பாக, உன்னியின் அம்மாவாக வரும் கேபிஏசி லலிதா (இப்படம் வெளியாவதற்குள் அவர் மறைந்துவிட்டார்) மிக சிறப்பாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, சத்யராஜ் தனது அப்பாவித்தனமான குணச்சித்திர நடிப்பால் கலகலப்பூட்டி, நெகிழவும் வைக்கிறார். ஊர்வசி வழக்கம்போல நடிப்பில் பிரித்து மேய்கிறார். ஆர்ஜே பாலாஜி - அபர்ணா பாலமுரளி ஜோடியின் நடிப்பிலும் குறை சொல்ல ஏதுமில்லை.

குடும்பம், அதன் மதிப்பு குறித்து எதுவுமே தெரியாமல் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் அனைத்து வயதினரும், சிரித்துக்கொண்டே, நெகிழ்ந்துகொண்டே கற்றுக்கொள்ள ஒரு ஜாலி பல்கலைக்கழகம்தான் இப்படம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in