

'மாமனிதன்' பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி "இந்தப் படம் பார்ப்பவர்களுக்கு பெரிய அனுபவமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் 4-வது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் 'மாமனிதன்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், சாஜி சென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
'மாமனிதன்' படத்திற்காக முதல்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றியுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இந்தப்படம், கரோனா அச்சுறுத்தல் மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட சில காரணங்களால் ரிலீசாகாமல் இருந்து வந்தது. இதையடுத்து 4 முறை தள்ளிப்போன இந்தப் படத்தின் வெளியீட்டால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது படம் ஜூன் 24-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு நடந்தது. இதில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "நீங்க நடித்தால் நானும் - அப்பாவும் ம்யூசிக் பண்றோம் என யுவன் ஒரு நாள் சொன்னார். அப்படி துவங்கிய படம்தான் மாமனிதன். மிகப்பெரிய விஷயத்தை எளிமையா சொல்லக் கூடிய இயக்குநர் சீனு ராமசாமி. அப்படிதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். நான் நடிகனாக ஆசைப்பட்ட காலத்தில் குருசோமசுந்தரம் போல் நடிக்க வேண்டும் என ஏக்கம் இருக்கும். அப்படிபட்ட நடிகர் குரு சோமசுந்தரம். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இந்த படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் தான் காரணம். மூன்று இடங்களில் நடக்க கூடிய கதையை இவ்வளவு சீக்கிரம் எடுத்து முடிக்க இருவர்களுடைய அர்பணிப்பு தான் காரணம்.
பலர் நடிக்க ஒத்துகொள்ளாத கதாபாத்திரத்தை காயத்ரி ஏற்றுகொண்டு நடித்துள்ளார். அவருடைய திறமைகள் இன்னும் வெளிகொண்டு வரப்படவில்லை. இந்த படம் நம்முடைய கதையை கூறுவது போல் இருக்கும். யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து என் படத்திற்கு இசையமைக்க போகிறார்கள் என்ற வாய்ப்பு எனக்கு வந்தபோது, சீனுராமசாமி தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்த படம் ஒரு பெரிய அனுபவமாக பார்ப்பவர்களுக்கு இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.