

உலகில் உள்ள கிராமங்களை உலகமயம் உருக்குலைக்காத காலக்கட்டம். அந்த இயக்குநருக்கும்,கோடம்பாக்கத்து கனவுத்தொழிற்சாலையின் கதவுகள் திறக்கப்பட்டிருந்த நேரம். ரஜினி, கமல் என்ற இரண்டு இளைஞர்கள் கலைடாஸ்கோப் கண்ணாடிகளில் மின்னத் துவங்கி சிறிது காலமே ஆகியிருந்தது. என்ன செய்யப்போகிறார் இயக்குநர் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருந்தது.
அதுவரை அரங்குகளுக்குள் அடைப்பட்டுக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் கைப்பிடித்து, கிராமத்தின் வயல்வெளிகளுக்கு கொண்டுவந்தார் அந்தப் புதிய இயக்குநர். அருவிகளும் குருவிகளும் கட்டுப்பாடற்ற சுதந்திரத்துடன் சுற்றித்திரியும் கிராமத்து வீதிகளில் அழுக்கு வேட்டியுடன் வாழ்ந்த வெள்ளந்தி மனிதர்களின் வீடுகளின் திண்ணைக்கே அழைத்துச் சென்றார். அவர்தான் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.
தமிழ் சினிமாவில் ‘16 வயதினிலே’ ஏற்படுத்திய பாதைதான், தமிழ் சினிமாவின் திறந்தவெளி சிந்தனைக்கான களத்தை உருவாக்கித் தந்தது. அரங்குகளுக்குள்ளும், திரைச் சீலைகளுக்குள்ளம் குறுக்கப்பட்டிருந்த இயக்குநர்களின் கற்பனை வளத்தை, விசாலமாக்கி புதிய சிந்தனைகளுக்கு வித்திட்டவர் பாரதிராஜா.
பாரதிராஜாவின் ஆரம்பக் கால படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. தேனி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களான பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து ஆகியோர் கூட்டணியில் உருவான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் காலத்தால் மறக்கமுடியாதவை. ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘மண் வாசனை’, ‘புதுமைப்பெண்’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’ என பாரதிராஜாவுடன் இளையராஜாவும், வைரமுத்துவும் கூட்டணி சேர்ந்த படங்களின் வெற்றிகளும், இத்திரைப்படங்களில் வெளிவந்த பாடல்களும் தெவிட்டாத தேனமுதுகள்.
பின்னர் வந்த, ‘என்னுயிர்த் தோழன்’, ‘புது நெல்லு புது நாத்து’, ‘நாடோடித் தென்றல்’ உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜாதான். இளையராஜாவோடு மட்டுமல்ல, இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் தேவேந்திரன், ஹம்சலேகா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், தேவா, சிற்பி, ஹிமேஷ் ரேஷ்மையா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் பணிபுரிந்துள்ளனர்.
தேவேந்திரன்: தமிழகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்து, குறிப்பாக கிராமங்களில் வேரூன்றியிருந்த விதம் குறித்தும் பேசியிருந்த படம் ‘வேதம் புதிது’. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் தேவேந்தின். அதற்குமுன்பு வரை இளையாராஜாவின் இசை பாரதிராஜாவின் படங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்ததால், இந்தப் படத்தின் பாடல்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், "புத்தம் புது ஓலை வரும்", "கண்ணுக்குள் நூறு நிலவா", "மந்திரம் சொன்னேன் வந்துவிடு" உள்ளிட்ட மனதுக்கு நிறைவான பாடல்களை தந்திருப்பார். பாரதிராஜா - இளையராஜா காம்பினேஷனில் ‘கடலோர கவிதைகள்’ படம் வெளிவந்து அடுத்த ஆண்டில் வேதம் புதிது திரைப்படத்தை தந்தவர் இயக்குநர் பாரதிராஜா.
ஹம்சலேகா: பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘கொடிப் பறக்குது’, ‘கேப்டன் மகள்’ திரைப்படங்களின் இசையமைப்பாளர். இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ‘கொடிப் பறக்குது’.
இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு", "ஓ காதல் என்னை காதலிக்கவில்லை" உள்ளிட்ட பாடல்கள் சிறப்பாக அமைந்தன. அதேபோல் ‘கேப்டன் மகள்’ படத்தில் வரும் “எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று” பாடலும் சிறப்பாக அமைந்திருந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான்: கணினிமயமான இசை பாரதிராஜா படத்துக்கு சாத்தியமே இல்லை என்று எல்லோரும் தப்புக்கணக்கு போட்டுக்கொண்டிருந்த நேரத்தில், உருவானதுதான், பாரதிராஜா,வைரமுத்து, ரஹ்மான் கூட்டணி. இக்கூட்டணியில் முதலாவதாக வந்த ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் வந்த பாடல்கள் அனைத்துமே பட்டித்தொட்டியெங்கும் பரவியது.
தென் மாவட்டங்களில் தாய்மாமன் சீருக்கான பாடலாக இன்றுவரை "மானூத்து மந்தையிலே" பாடல்தான் என்ற அளவுக்கு மக்களுடன் கலந்துள்ளது. இதே காம்போவில் உருவான கருத்தம்மாவில் வரும் "போறாளே பொன்னுத்தாயி", "தென்மேற்கு பருவக்காற்று", ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தில் வரும், "சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு", "குளிருது குளிருது" பாடல்கள் என அனைத்துமே நெஞ்சில் நிறைந்தவை.
காம்பினேஷன்கள் உடைந்ததால் ஒருபோதும் தோற்றுப்போனவர் அல்ல பாரதிராஜா. பன்முகத் திறமை கொண்ட பாரதிராஜா, 6 தேசிய விருதுகள், பல முன்னணி நடிகர் - நடிகைகளை அறிமுகப்படுத்தியவர், பல இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்தவர்.
திரையரங்குகளில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்கும் நடைமுறை வருவதற்கு முன்பே, அவரது திரைப்படத்தின் கரகரப்பான அவரின் குரலில் வரும், "என் இனிய தமிழ் மக்களே" என்றுக் கூறி நம் ஒருங்கிணைத்தவர் பாரதிராஜா.
"பாலுங்கிறது உங்க பேரு, தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?" என்று அவர் போட்ட விதைதான், "எல்லோரும் சமம்தானே டீச்சர்" என்று கேட்கும் அளவிற்கு வளர்ந்து விருட்சமாகியிருப்பது.